Home நாடு மலேசியாகினி ஊடகத்தின் மறுசீரமைப்பு திட்டம் அறிவிப்பு

மலேசியாகினி ஊடகத்தின் மறுசீரமைப்பு திட்டம் அறிவிப்பு

184
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாகினி நீண்டகாலமாக நிலைத்தன்மையோடு இயங்குவதற்கும் வெற்றிகரமாக செயல்படுத்துவதை உறுதிப்படுத்துவதற்காகவும், சில ஊழியர்களை பாதிக்கும் மறுசீரமைப்பை கவனமான பரிசீலனை செய்த பிறகு தொடங்குகிறோம் என மலேசியாகினி நிருவாகம் அறிவித்துள்ளது.

“வேலை இழப்புகளை குறைப்பதற்காக நாங்கள் கடுமையாக முயன்றோம்; எனினும், சில வேலை குறைப்புகளும், குறிப்பிட்ட சில பணி விதிகளில் மாற்றங்களும் தவிர்க்க முடியாதவை. இதற்குப் பின்னால், உலகளவில் செய்தி ஊடகங்கள் கடுமையான காலக்கட்டத்தை எதிர்கொண்டு வருவதால் நாங்கள் இழப்புகளை குறைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தி விட்டோம். மூன்றாண்டுகளில் பல செய்தி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்யவோ அல்லது மூடிவிடவோ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மலேசியாக்கினி இந்த மாற்றத்துக்கு உள்ளாகும் சமீபத்திய நிறுவனங்களில் ஒன்றாகும்” எனவும் அந்த அறிவிப்பு தெரிவித்தது.

“இது மலேசியா கினியில் உள்ள அனைவருக்கும், குறிப்பாக நேரடியாக பாதிக்கப்படுபவர்களுக்கு கடினமான காலம். அவர்களுக்கு நாங்கள் முடிந்த வரை ஆதரவளிக்க உறுதி கொண்டுள்ளோம். மலேசியாகினி சவால்களை எதிர்கொள்ளப் பழகிய நிறுவனமாகும். மேலும் நம் சந்தாதாரர்களின் உறுதியான ஆதரவை நம்பி பல புயல்களைத் தாங்கி முன்னேறியுள்ளோம்,” என மலேசியாகினியின் தலைமைச் செய்தியாளர் ஆர்.கே. ஆனந்த் கூறினார்.

#TamilSchoolmychoice

மலேசியாகினியின் தலைமை செயல் அதிகாரி தாம் சின் ஹாவ், “இந்த மறுசீரமைப்பு முக்கியமானது, நாங்கள் உறுதியாக இருந்து நாட்டிற்குத் தேவையான ஆழமான,  சிறப்புமிக்க செய்திகள் கொண்டுவருவதில் முக்கியக் கவனம் செலுத்த தொடர்ந்து முயன்று வருவோம்” என அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

எனினும், மலேசியாகினி மூடப்படவில்லை என்பதை அந்நிறுவனத்தின் அறிக்கை உறுதிப்படுத்தியது. “கடந்த 25 வருடங்களில் பல ஏற்றத்தாழ்வுகளை நாம் எதிர்கொண்டுள்ளோம். எங்கள் அலுவலகம் பல முறை சோதனைக்குட்பட்டது, எங்களின் பல குழுக்கள் மற்றும் துணை நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த மறுசீரமைப்பு எங்கள் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாகும். மலேசியாவுக்கு நாங்கள் தொடர்ந்து சேவை செய்யும் திறன் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம்” எனவும் மலேசியாகினி அறிக்கை குறிப்பிட்டது.

மறுசீரமைப்பு தற்போது நடைமுறையில் உள்ளதாகவும் மலேசியாகினியின் இணை நிறுவனமான எஃப்.ஜி. மீடியாவில் (FG Media) வேலைவாய்ப்புகளைப் பெற சில ஊழியர்களுக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும், சிலர் வேலையிழக்கப் போகின்றனர் எனவும் மலேசியாகினி அறிக்கை தெரிவித்தது.

“குறைந்த மூலதனங்களுடன், நாங்கள் தேர்வு செய்யும் செய்திகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டியுள்ளது. விருதுகள் வென்ற பரபரப்பான செய்திகள், சிறப்பு செய்திகள், ஆழமான பகுப்பாய்வுகள், மற்றும் நேரடித் தொடர்புகளின் மூலம்  பெறப்பட்ட குறிக்கோள் கொண்ட செய்திகள் போன்றவையே எங்கள் பெருமிதம். இவை போன்ற முக்கியமான துறைகளில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்” எனவும் கூறியிருக்கிறது மலேசியாகினி.

இறுதியாக, நம் வாசகர்களின் மூலம் பெறும் வருமானம் நம்மை நிதி மற்றும் செய்தியியல் துறையில் சுதந்திரமாக செயல்பட வைத்திருக்கிறது. எங்களை நிலைத்திருக்கச் செய்ய, சந்தாதாரராகவோ அல்லது நன்கொடை அளிப்பதன் மூலம் உதவுங்கள் என மலேசியாகினி வாசகர்களிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள் தலைமைச் செய்தியாளர் ஆர்.கே. ஆனந்த் – தலைமைச் செயல் நடவடிக்கை அதிகாரி தாம் சின் ஹாவ் இருவரும்!