Home இந்தியா ரத்தன் டாடா மறைவு: மோடி, ஸ்டாலின் இரங்கல்!

ரத்தன் டாடா மறைவு: மோடி, ஸ்டாலின் இரங்கல்!

211
0
SHARE
Ad
ரத்தன் டாடா

மும்பை : இந்தியாவின் வணிகக் குழுமமான டாடா நிறுவனத்தை அனைத்துலக அளவில் பிரபலமாக்கிய ரத்தன் டாடா இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 10) தனது 86-வது  வயதில்  காலமானார். அவர் இறுதிவரை திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்ந்தவர்.

அவரின் மறைவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்தார். தூரநோக்குச் சிந்தனையாளர் என ரத்தன் டாடாவை வர்ணித்த மோடி, இந்தியாவின் பழமையான, பெருமை வாய்ந்த டாடா குழுமத்திற்கு அவர் நிலையான தலைமைத்துவத்தை வழங்கினார் எனப் புகழாரம் சூட்டினார்.

ரத்தன் டாடா மறைவுக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இந்தியத் தொழில்துறையின் பெருந்தூணாகவும், பணிவு மற்றும் மனிதநேயத்தின் அடையாளமாகவும் திகழ்ந்த திரு. ரத்தன் டாடா அவர்கள் மறைந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது. அவரது தொலைநோக்குமிக்க தலைமை டாடா குழுமத்தின் வளர்ச்சியை வடிவமைத்ததோடு, அறத்துடன் கூடிய தொழில்புரிதலுக்கான அளவுகோலாகவும் உலக அளவில் விளங்கியது. நாட்டின் வளர்ச்சியிலும், புதுமையிலும், மனிதநேயச் செயல்பாடுகளிலும் திரு. ரத்தன் டாடா அவர்கள் காட்டிய இடையறாத அர்ப்பணிப்பினால் கோடிக்கணக்கானோரின் வாழ்வில் அழியாத் தடத்தினை அவர் பதித்துச் சென்றுள்ளார்” என ஸ்டாலின் தெரிவித்தார்.

“இந்தியா ஒரு மாபெரும் ஆளுமையை இழந்துவிட்டது. எனினும் அவரது வாழ்வும் பணியும் அடுத்த பல தலைமுறைகளுக்கு ஊக்கமளித்துக் கொண்டே இருக்கும்.
இத்துயர்மிகு தருணத்தில், திரு. ரத்தன் டாடா அவர்களது குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் டாடா குழுமத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் உரித்தாக்கிக் கொள்கிறேன்” என ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.