
கோலாலம்பூர் : கையூட்டு பெற்ற குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் எதிர்நோக்கியிருக்கும் மலேசியாகினி இணைய ஊடகத்தின் பத்திரிகையாளர் பி.நந்தகுமாருக்கு ஆதரவாக பத்திரிகையாளர் சங்கங்கள் அணி திரண்டுள்ளன.
யாராக இருந்தாலும் ஒருவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியே என்ற அடிப்படையில் வழக்கு நடைபெறும் காலம் முழுவதும் நந்தகுமாருக்கு ஆதரவாக செயல்பட இரண்டு பத்திரிகையாளர் சங்கங்கள் முன்வந்துள்ளன.
தேசியப் பத்திரிகையாளர் சங்கத்தின் மலேசியாகினி குழுவினர் விடுத்த அறிக்கையில் வழக்கை அணுக்கமாகக் கண்காணிப்போம் என்றும் நந்தகுமாருக்கு நியாயமான விசாரணை கிடைப்பதை உறுதி செய்வோம் – அவருக்கு முறையான வழக்கறிஞர் வாய்ப்பு அமைவதையும் உறுதி செய்வோம் – என்றும் தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை (மார்ச் 14) ஷா ஆலாம் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் நந்தகுமார் மீது கையூட்டு பெற்றதற்கான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து அவர் விசாரணை கோரினார்.
கையூட்டு பெற்றது தொடர்பில் ஊழல் சட்டம் பிரிவு 16(a)(A) கீழ் நந்தகுமார் இன்று குற்றம் சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக பட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பெற்ற கையூட்டின் மதிப்பில் 5 மடங்குக்கு குறையாத அபாரதமும் அவருக்கு விதிக்கப்படலாம்.
ஷா ஆலாம் கோன்கோர்ட் தங்கும் விடுதியில் 28 பிப்ரவரி 2025-ஆம் நாள் இரவு 11.45 மணியளவில் அவர் பாகிஸ்தானிய முகவர் (ஏஜெண்ட்) ஒருவரிடமிருந்து கையூட்டு பணத்தைப் பெற்றதாக நந்தகுமார் மீதான குற்றச்சாட்டு அறிக்கை விவரிக்கிறது.
குடிநுழைவுத் துறையில் சட்டவிரோதமாகச் செயல்படும் குழுக்கள் குறித்து மலேசியாகினி இணைய ஊடகத்தில் எழுதாமல் இருக்க இந்த கையூட்டு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு அறிக்கை குறிப்பிட்டது.
ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் 10,000 ரிங்கிட் பிணையை நந்தகுமாருக்கு வழங்கிய நீதிபதி நாசிர் நோர்டின் அவரின் அனைத்துலகக் கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.
வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறும் என்றும் மாதம் ஒருமுறை நந்தகுமார் அருகிலுள்ள ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு நேரில் வரவேண்டும் என்றும் நீதிபதி மேலும் உத்தரவிட்டார்.
பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு ஒன்றும் (Committee to Protect Journalists) நந்தகுமார் மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடுமாறு ஊழல் தடுப்பு ஆணையத்தைக் கேட்டுக் கொண்டது.
பத்திரிகையாளர்கள் தவறுகளையும், ஊழல்களையும் பகிரங்கப்படுத்துவதில் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழல் வேண்டும் என அந்த அமைப்பின் சார்பில் அதன் ஆசியா பிரிவுக்கான ஒருங்கிணைப்பாளம் பே லீ யீ (Beh Lih Yi) தெரிவித்தார்.
எதிர்மறையான செய்திகளை வெளியிடாமல் இருப்பதற்காக மலேசியாகினி பத்திரிகையாளர் பி.நந்தகுமார் 20 ஆயிரம் ரிங்கிட் கையூட்டு பெற்றதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் அண்மையில் அவரைக் கைது செய்தது. 4 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட பின்னர் 10 ஆயிரம் ரிங்கிட் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையில் சம்பந்தப்பட்ட முகவருக்கு எதிராக நந்தகுமார் தற்போது காவல் துறை புகார் ஒன்றை செய்துள்ளார். அந்நியத் தொழிலாளர்களுக்கான முகவரான அந்த பாகிஸ்தானிய நபர் தனக்கு கையூட்டு கொடுக்க முயற்சி செய்ததாக அவர் அந்தப் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் தான் உண்மையானவன் என்பதை வலியுறுத்தியுள்ள நந்தகுமார், காவல் துறையினர் சம்பந்தப்பட்ட முகவரை விசாரிக்க வேண்டும் எனவும் காரணம் அவர் மனிதக் கடத்தல் குற்றத்திற்காக ஏற்கனவே தண்டிக்கப்பட்டவர் என்றும் தெரிவித்துள்ளார்.
தனது புகாரை நந்தகுமார் கடந்த சனிக்கிழமை (மார்ச் 8) காவல் துறையில் பதிவு செய்தார்.