Home நாடு டத்தோ ரமணனுக்கு பகாங் மாநிலத்தின் ‘டத்தோஸ்ரீ’ விருது!

டத்தோ ரமணனுக்கு பகாங் மாநிலத்தின் ‘டத்தோஸ்ரீ’ விருது!

161
0
SHARE
Ad

குவாந்தான் : தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஆர்.ரமணனுக்கு பகாங் மாநிலத்தின் உயரிய விருதான ‘டத்தோஸ்ரீ’ நேற்று வியாழக்கிழமை (செப்டம்பர் 12) பகாங் சுல்தான் அவர்களால் இங்குள்ள பகாங் அரண்மனையில் வழங்கப்பட்டது.

Darjah Kebesaran Sultan Ahmad Shah Pahang Yang Amat Di Mulia – Peringkat Pertama Sri Sultan Ahmad Shah Pahang (SSAP),  என அழைக்கப்படும் அந்த விருது டத்தோஸ்ரீ என்ற தகுதியைக் கொண்டதாகும். பகாங் சுல்தானின் 65-வது பிறந்த நாளை முன்னிட்டு வழங்கப்பட்ட விருதுகளில் இதுவும் ஒன்றாகும்.

சுங்கைபூலோ நாடாளுமன்ற உறுப்பினரான ரமணன் ஏற்கனவே டத்தோ விருதைப் பெற்றவராவார்.

#TamilSchoolmychoice

விருதைப் பெற்றதும் ஊடகவியலாளர்களிடம் உரையாடிய டத்தோஸ்ரீ ரமணன் மாட்சிமை தங்கிய பகாங் சுல்தானுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

43 வயதான ரமணன் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் பிரதமர் அன்வார் இப்ராகிம் அவர்களால் துணையமைச்சராக நியமிக்கப்பட்டார். ரமணன் பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு துணைத் தலைவருமாவார்.

துணையமைச்சராவதற்கு முன்பாக ‘மித்ரா’ தலைவராகச் செயல்பட்ட அவர் அந்த அமைப்பின் வழி இந்திய சமூகத்திற்கான பல நலத் திட்டங்களை அறிமுகப்படுத்தினார். 2023-ஆம் ஆண்டுக்கான 100 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை மித்ரா சார்பில் அவர் நிர்வகித்து அதன்மூலம் கொண்டுவரப்பட்ட திட்டங்களின் மூலம் சுமார் 100,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பயனடைந்தனர் என மதிப்பிடப்படுகிறது.

துணையமைச்சரான பின் தெக்குன் நேஷனல் கடனுதவித் திட்டத்தின் மூலம் இந்திய வணிக முனைவர்களுக்கு 30 மில்லியனுக்கும் மேற்பட்ட கடனுதவித் திட்டங்கள் வழங்கப்படுவதற்கு உதவி புரிந்தார்.

பேங்க் ராயாட் வங்கி மூலம் இந்திய மகளிருக்கு 50 மில்லியன் கடனுதவித் திட்டங்கள் வழங்கப்படுவதையும் அவர் முன்னெடுத்தார்.

“இந்திய சமூகத்திற்கு மேலும் பல உதவிகள் தேவைப்படுகின்றன. மடானி அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை இந்திய சமூகத்திற்காகத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு பல முன்னெடுப்புகள் தற்போது அமுலில் இருப்பதால் இந்திய சமூகத்தின் எதிர்கால நலன்கள் காக்கப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது” எனவும் ரமணன் தெரிவித்தார்.