கோலாலம்பூர்: நாடு முழுவதும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்படும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் ரபிசி ரம்லி-நூருல் இசா இருவருக்கும் இடையிலான துணைத் தலைவர் பதவிக்கான மோதல் ஒருபுறமிருக்க, 4 உதவித் தலைவர் பதவிகளுக்கான போட்டியும் மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
உதவித் தலைவருக்குப் போட்டியிடும் 11 வேட்பாளர்களில் 4 இந்திய வேட்பாளர்களும் இணைந்திருப்பதால், இந்திய சமூகத்திலும் இந்தியர் யாராவது உதவித் தலைவர் தேர்தலில் வெல்ல முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆனால், நிலைமையைப் பார்க்கும்போது 4 இந்திய வேட்பாளர்களுமே வெற்றி பெற வாய்ப்பில்லை என்பதைத்தான் பிகேஆர் கள நிலவரங்கள் காட்டுகின்றன.
கடந்த 2022 பிகேஆர் கட்சித் தேர்தலிலும் இந்தியர் யாராலும் உதவித் தலைவர் தேர்தலில் வெல்ல முடியவில்லை. உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட இந்தியர்களில் அதிக வாக்குகள் பெற்று ஐந்தாவதாக வந்தவர் மணிவண்ணன் கோவின். 2008-இல் காப்பார் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். இருந்தாலும் அவரால் முதல் நான்கு உதவித் தலைவர்களுக்கான இடங்களில் ஒன்றைப் பிடிக்க முடியவில்லை.
இந்த முறை உதவித் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடப்போவதாக மணிவண்ணன் அறிவித்துள்ளார். பிகேஆர் கட்சிக்கான தேசியத் தலைவரின் அரசியல் செயலாளர்களில் ஒருவராக மணிவண்ணன் செயல்பட்டு வருகிறார்.
2022-இல் நடைபெற்ற பிகேஆர் கட்சித் தேர்தலில் அதிக வாக்குகளில் முதலாவதாக சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி, இரண்டாவதாக அறிவியல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் சாங் லீ காங், மூன்றாவதாக இயற்கை வளங்கள், சுற்றுச் சூழல் அமைச்சர் நிக் நாஸ்மி நிக் அகமட், நான்காவதாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் அமினுடின் ஹாருண் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்த நால்வரும் மீண்டும் தங்களின் பதவிகளைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடுகின்றனர்.
உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் 11 வேட்பாளர்களில் 4 பேர் இந்தியர்கள். அவர்கள் பின்வருமாறு:
- டத்தோஶ்ரீ ஆர்.இரமணன் (தொழில் முனைவோர், கூட்டுறவுத் துறை துணை அமைச்சர்)
- ஆர்.யுனேஸ்வரன் (சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர்)
- டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் (பிகேஆர் துணைத் தலைமைச் செயலாளர்)
- மணிவண்ணன் கோவின் (பிகேஆர் தலைமையக அரசியல் செயலாளர்)
போட்டியிடுபவர்களில் யாராவது விலகிக் கொள்ள விரும்பினால் அதற்கான இறுதி நாள் மே 20-ஆம் தேதி ஆகும். எனவே, இறுதி நேரத்தில் ஒருசில உதவித் தலைவர் வேட்பாளர்கள் விலகிக் கொள்ளலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிகேஆர் கட்சி உறுப்பினர்களில் இந்தியர்கள் 40 விழுக்காட்டினர் என அடிக்கடி கூறப்படுகிறது. அப்படி இருந்தும் – கடந்த முறை உறுப்பினர்கள் வாக்களிக்கலாம் என்ற நடைமுறை இருந்தாலும் – ஓர் இந்தியர் கூட உதவித் தலைவராக வெல்ல முடியவில்லை.
இந்த முறை பிகேஆர் கட்சித் தேர்தல் நடைமுறைகளும் மாற்றப்பட்டுள்ளன. முன்பு போல் உறுப்பினர்கள் நேரடியாக வாக்களிக்கும் நடைமுறை இப்போது இல்லை. மாறாக, பேராளர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிகேஆர் தொகுதியிலும் உறுப்பினர்களாக இருப்பவர்களின் இன விழுக்காட்டிற்கு ஏற்ப பேராளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உதாரணமாக, ஒரு தொகுதியில் 20 விழுக்காட்டு இந்தியர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள் என்றால், அந்தத் தொகுதியின் பேராளர்களில் 20 விழுக்காட்டினர் இந்தியர்களாக இருக்க வேண்டும். ஒரு தொகுதியில் 50 விழுக்காடு உறுப்பினர்கள் மலாய்க்காரர்கள் என்றால் 50 விழுக்காடு பேராளர்களும் மலாய்க்காரர்களாக இருக்க வேண்டும். இது தவிர 30 விழுக்காடு பேராளர்கள் மகளிராக இருக்க வேண்டும்.
அதுமட்டுமல்ல! தொகுதி நிலையில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டவர்கள் தங்களுக்குக் கிடைத்த வாக்குகளின் விழுக்காட்டின் அடிப்படையில் பேராளர்களைப் பரிந்துரைக்கலாம்.
இது போன்ற மாற்றங்களால் – இந்த முறை சுமார் 30 ஆயிரம் பேராளர்களே, வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் இந்தியப் பேராளர்கள் எத்தனை பேர் என்ற விவரங்கள் இல்லை.
எப்படிப் பார்த்தாலும் இந்தியப் பேராளர்களின் எண்ணிக்கை மொத்த பேராளர்களில் 20 விழுக்காட்டைத் தாண்டாது எனக் கணிக்கப்படுகிறது. இந்நிலையில், 4 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இந்திய வாக்குகள் பிளவுபடும்.
இறுதியில் இந்திய வேட்பாளர்கள் யாருமே உதவித் தலைவர் போட்டியில் வெல்ல முடியாது என்ற நிலைமையே ஏற்படும் எனக் கருப்படுகிறது. அதுமட்டுமல்ல, மற்ற போட்டியாளர்களில் அமைச்சர்களும் மந்திரிபெசார்களும் அடங்கியிருப்பதால், அவர்களை வீழ்த்தி இந்திய வேட்பாளர்கள் வெல்வதும் கடினம் என்றே கணிக்கப்படுகிறது.