கோலாலம்பூர்: அரசியலில் எதுவும் நடக்கலாம் – இன்று நண்பர்கள், நாளை எதிரிகள் – என்பது போன்ற அரசியல் தத்துவங்களின் இன்னொரு களமாக மாறியுள்ளது பிகேஆர் தேர்தல். 2018 பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவருக்கான போட்டியில் ரபிசி ரம்லி – அஸ்மின் அலி இடையிலான மோதலில், ரபிசி தோல்வியடைந்தபோது கண்கலங்கினார் நூருல் இசா. அந்தத் தேர்தலில் ரபிசியை அவர் தீவிரமாக ஆதரித்தார்.
2021 கட்சித் தேர்தலில் ரபிசியை எதிர்த்துக் களம் கண்டார் சைபுடின் நசுத்தியோன். அந்தத் தேர்தலில் ஒதுங்கியிருந்தார் நூருல். ரபிசி சைபுடினைத் தோற்கடித்து கட்சியின் துணைத் தலைவரானார்.
காலப்போக்கில் அன்வார் பிகேஆர் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகும்போது, ரபிசி தலைவராவார் – நூருல் துணைத் தலைவராவார் – என்றே பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஒருவாரத்திற்கு முன்புவரை சைபுடின்தான் ரபிசியை எதிர்த்துப் போட்டியிடப் போகிறார் என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.
ஒரே வாரத்தில் அனைத்தும் மாறிவிட்டன. ரபிசி மீண்டும் துணைத் தலைவர் பதவியைத் தற்காக்கப் போவதாக அறிவிக்க – அவரை எதிர்த்து நிற்கிறார் நூருல். இதனால் அன்வார் இப்ராகிம் குடும்ப அரசியலை கட்சிக்குள் நுழைக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழலாம். ஆனால், நூருல் அரசியல் வரவோ வித்தியாசமானது. தந்தையின் அரசியல் செல்வாக்கின் நிழலிலோ – தந்தை வகித்த பதவியின் சொகுசு வாழ்க்கையினாலோ அரசியலுக்கு வந்தவர் அல்ல!
மாறாக, 18-வது வயதில் அரசியல் விரோதம் காரணமாக, சிறைப்படுத்தப்பட்ட தந்தைக்காக – தாயாருக்கு உதவியாக போராட்டக் களத்திற்குள் வந்தவர். பிகேஆர் கட்சியைத் தோற்றுவித்த உறுப்பினர்களில் ஒருவர். சீர்திருத்தங்களின் இளவரசியாக அடையாளப்படுத்தப்படுவர்.
ரபிசியை அவர் தோற்கடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நீண்டகாலமாக கட்சியில் தன்னை ஐக்கியப்படுத்தி வந்துள்ள ரபிசி ரம்லி அனுதாப வாக்குகளால், வெற்றி பெறக் கூடிய வாய்ப்பையும் மறுப்பதற்கில்லை.
பல இரண்டாம் கட்டத் தலைவர்கள் காலம் காலமாக, தங்களின் வாழ்க்கையின் சுகதுக்கங்களுக்கிடையில் அன்வாருக்காகவும், பிகேஆர் கட்சிக்காகவும் தியாகங்கள் செய்து வந்திருக்கும் நிலையில், இறுதிக் கட்டத்தில் அன்வார் தனது மகளை துணைத் தலைவராக நிறுத்துவது, எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தலாம். குடும்ப அரசியலைக் கொண்டுவருகிறார் என்ற குற்றச்சாட்டுகளால் பேராளர்கள் ரபிசியை ஆதரிக்க முற்படலாம்.
அடுத்து எழும் கேள்வி – இந்தப் போட்டியால் கட்சி வலிமை பெறுமா அல்லது பிளவுபடுமா என்பதுதான்! ரபிசி துணைத் தலைவருக்கான போட்டியில் தோல்வியடைந்தால், அமைச்சுப் பொறுப்புகளைத் துறப்பேன் – மீண்டும் அடிமட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு கட்சியை வலிமைப்படுத்துவேன் – என அறிவித்திருக்கிறார்.
ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட நூருலும் செல்வாக்கு மிக்க ரபிசி புறக்கணிக்க மாட்டார் – புறந்தள்ள மாட்டார் – என்றே எதிர்பார்க்கலாம்.
எனவே, இந்தப் போட்டியால் பிகேஆர் கட்சி மேலும் வலிமை பெறும் என்றே நம்பலாம். மாறிவரும் மலேசிய அரசியல் களத்தில் நூருலின் வெற்றி எதிர்காலத்தில் பல அரசியல் மாற்றங்களுக்கு வித்திடும் என்றே நம்பலாம்!
இதற்கிடையில், தனது விடுமுறையின்போது, அவர் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமையும், பக்காத்தான் ஹராப்பான் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலையும் சந்தித்ததாக ரபிஸி கூறியிருக்கிறார்.
“டத்தோஸ்ரீ அன்வாருடனான எனது கலந்துரையாடலின் போது, 16வது பொதுத் தேர்தலுக்கான பிரச்சார உத்தி தற்போதைய பொதுமக்கள் நிலைமைக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற எனது கருத்தைப் பகிர்ந்து கொண்டேன்,” என்று ரபிசி தெரிவித்தார்.
“தற்போதைய அரசாங்கப் பிரச்சாரம் தங்களைத் தற்காக்கும் பாவனையில் இருக்கிறது. மாறாக, பிகேஆர் எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்ததைப் போல் தாக்குதல் நிலையில் இல்லாததும் எனது கவலையாக உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.
அவர் தனது கட்சியைத் தற்காத்து அமைச்சரவையில் தொடர வேண்டும் என்று இரு தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்ததாக ரபிசி குறிப்பிட்டார்.
பொருளாதார அமைச்சரான அவர், பிகேஆர் தேசிய நிலையிலான தேர்தல்களில் தனது பதவியைப் தற்காக்கப் போவதாகவும், மற்றவர்கள் அந்தப் பதவிக்குப் போட்டியிடுவதை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
ஒளிமயமான எதிர்காலத்திற்கான திறமைகளை வளர்க்க வேண்டும்
“கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியை நான் வரவேற்கிறேன், மேலும் கட்சியை வலுப்படுத்த மற்ற வேட்பாளர்களுடன் இணைந்து களத்தில் இறங்குவேன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால், துணைத் தலைவராக கட்சித் தலைமையிலும், அரசாங்கத்தின் மூலமாகவும் தொடர்ந்து பங்காற்ற முடியும்,” என்று அவர் கூறினார்.
இனி அடுத்த இரண்டு வாரங்கள் பிகேஆர் கட்சியில் எழப்போகும் அரசியல் கனலின் வெப்பத்தையும் அதைத் தொடர்ந்து அரசியல் திருப்பங்களையும் மலேசியர்கள் பரபரப்புடனும் ஆவலுடனும் எதிர்நோக்குவார்கள்.