கோலாலம்பூர்: நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சித் தேர்தல்களில் எதிர்பாராத திருப்பமாக, அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் இசா துணைத் தலைவருக்கான போட்டியில் குதிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவேன் என நூருல் அறிவித்திருக்கிறார். எனினும் இறுதி நேர மாற்றமாக அவரும் துணைத் தலைவருக்கான போட்டியில் இறங்கலாம் என்ற ஆரூடங்கள் அதிகரித்து வருகின்றன.
எதிர்வரும் மே 8, 9-ஆம் தேதிகளில் பிகேஆர் கட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில் அன்வார் இப்ராகிம் கட்சியின் தேசியத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
எனவே, அரசியல் பார்வையாளர்கள், பிகேஆர் கட்சியினரின் கவனம் அனைத்தும் தற்போது துணைத் தலைவர், உதவித் தலைவர் பதவிகளுக்கான போட்டியை நோக்கி திரும்பியுள்ளது.
குறிப்பாக உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் குதிப்பாரா? நடப்பு துணைத் தலைவர் ரபிசி ரம்லி தனது பதவியை மீண்டும் தற்காத்துக் கொள்வாரா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதற்கிடையில் கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமையும், நடப்புத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லியையும் சந்தித்துப் பேசியுள்ளதாகவும் கட்சியில் தனது எதிர்காலம் குறித்து கலந்தாலோசித்ததாகவும் சைபுடின் நசுத்தியோன் கூறியுள்ளார்.
சைபுடின் நசுத்தியோன் இறைவனின் மீது நம்பிக்கை வைத்து உரிய நேரத்தில் அறிவிப்பை வெளியிடுவேன் என்று தெரிவித்துள்ளார்.
ரபிசி ரம்லியுடன் நீண்டநேரம் விவாதித்ததாகவும், அன்வாருடன் பல சந்திப்புகளை நடத்தியிருப்பதாகவும் சைபுடின் நசுத்தியோன் மேலும் தெரிவித்துள்ளார்.
ரபிசியை எதிர்த்து சைபுடின் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற ஆரூடங்கள் வலுத்து வருகின்றன.
சைபுடின் நசுத்தியோன், ரபிசி இருவரும் 2022ல் பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்காக போட்டியிட்டனர். அந்தப் போட்டியில் ரபிசி 16,668 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார். சைபுடின் 2014இல் அஸ்மின் அலி- காலிட் இப்ராஹிமுக்கு எதிராக மும்முனைப் போட்டியில் தோல்வியடைந்தார்.
எனவே, இம்முறை மீண்டும் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டால் அவர் அந்தப் பதவியை அடைய மேற்கொள்ளும் மூன்றாவது முயற்சியாக இது அமையும்.
எனினும், ரபிசியைத் தோற்கடிக்கும் ஆற்றலும் வல்லமையும் அவருக்கு இருக்கிறதா என்ற கேள்விகளும் அடிக்கடி எழுப்பப்படுகின்றன.
ரபிசியின் ஆதரவாளர்கள் பலர் தொகுதி அளவிலான தேர்தல்களில் தோல்வியடைந்திருப்பது சைபுடினின் சாதகமாகப் பார்க்கப்படுகிறது. எனினும் இம்முறை பேராளர்கள் மூலம் தேசிய நிலையிலான தலைவர்கள் பிகேஆர் கட்சியில் முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இந்தப் புதிய தேர்தல் நடைமுறை யாருக்கு சாதகமாக இருக்கும் என்ற ஐயப்பாடுகளும் எழுந்துள்ளன.
தொகுதி நிலையில் தோல்வியடைந்தவர்களும் தாங்கள் பெற்ற வாக்குளின் எண்ணிக்கையின் விழுக்காட்டின் அடிப்படையில் பேராளர்களை நியமிக்க முடியும் என்பதால், ரபிசியின் ஆதரவு பேராளர்கள் கணிசமான எண்ணிக்கையில் இடம் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நூருல் இசாவும் போட்டியிடுகிறாரா?
திடீர் திருப்பமாக நூருல் இசா துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டும் என ஆதரவுக் குரல்கள் பிகேஆர் கட்சியில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
அன்வாரின் வலது கரமாகக் கருதப்படுபவரும் அவரின் முதன்மை அரசியல் செயலாளருமான டத்தோஶ்ரீ ஷம்சுல் இஸ்கண்டார் உள்ளிட்ட 4 மலாக்கா தொகுதி தலைவர்கள் நூருல் இசா துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட வேண்டுமென அறைகூவல் விடுத்துள்ளனர்.
மேலும் பல பிகேஆர் தலைவர்கள் நூருல் இசாவுக்கு ஆதரவாக அறிக்கைகள் விடுத்துள்ளனர்.
இதன் காரணமாக, துணைத் தலைவர் பதவிக்கான போட்டி மும்முனைப் போட்டியாக உருவெடுக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.