புதுடில்லி: ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயருடன் இன்று புதன்கிழமை (மே 7) அதிகாலையில் இந்தியா, பாகிஸ்தான் பகுதியிலுள்ள காஷ்மீரின் 9 பயங்கரவாத மையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
ஆறு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய பாகிஸ்தான் 8 பேர் மரணமடைந்ததாக அறிவித்தது. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் எல்லை கடந்து துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.
பயங்கரவாத முகாம்கள் மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறிய இந்தியா, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் அறிவித்தது. அமெரிக்காவுக்கு இந்தத் தாக்குதல் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தாக்குதலை ஒரு போர் நடவடிக்கை என பாகிஸ்தான் பிரதமர் வர்ணித்துள்ளார்.
பகல்காம் பகுதியில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பதிலடியாக இந்தியா இந்தத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
தாக்குதல்களுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட முதல் காணொலிகளில் வெடிச்சத்தங்கள் கேட்டன. தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகள் இருளில் மூழ்கின. மீட்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
அவசர சிகிச்சை வாகனங்கள் (ஆம்புலன்ஸ்) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்வதை காணொலிகள் காட்டின.
சிந்தூர் என்பது இந்துப் பெண்கள் நெற்றியில் இடும் குங்குமப் பொட்டின் பெயராகும். அந்தப் பெயரிலேயே இந்தியாவின் தாக்குதலுக்குப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே, பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீரை நிறுத்திய இந்தியா, பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை பாகிஸ்தானுக்கு எதிராக எடுத்து வருகிறது. அவற்றில் உச்சகட்டமாக இந்த ஏவுகணைத் தாக்குதல் நடத்தட்டிருக்கிறது.