Home இந்தியா பாகிஸ்தான் மீதான 25 நிமிடத் தாக்குதலில் பயங்கரவாதக் குழுவின் தலைவனின் குடும்பத்தினரும், உதவியாளர்களும் பலி!

பாகிஸ்தான் மீதான 25 நிமிடத் தாக்குதலில் பயங்கரவாதக் குழுவின் தலைவனின் குடும்பத்தினரும், உதவியாளர்களும் பலி!

89
0
SHARE
Ad
ஜாயிஷ்-இ-முகமட் கும்பலின் தலைவன் மசூத் ஆசார்

புதுடில்லி : பாகிஸ்தான் மீது இந்தியாவின் இராணுவம்-கடற்படை – விமானப் படை ஆகிய 3 அமைப்புகளும் இணைந்து மேற்கொண்ட துல்லியமான அதிரடித் தாக்குதலில் 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜாயிஷ்-இ-முகமட், லஷ்கார் இ-தய்பா, ஹிஸ்புல் முஜாஹிடின் ஆகிய 3 பயங்கரவாதக் கும்பல்களைக் குறிவைத்து இந்தியாவின் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த 3 பயங்கரவாதக் கும்பல்களும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்கு எதிராகப் பயங்கரவாதத் தாக்குதல்களை அடிக்கடி மேற்கொண்டு வந்தன.

ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயர் குறிப்பிடப்பட்ட இன்றையத் தாக்குதலில் ஜாயிஷ்-இ-முகமட் கும்பலின் தலைவனான மசூத் ஆசாரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். மசூத் ஆசார் இன்னும் உயிரோடு இருக்கிறாரா அல்லது அவரும் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டாரா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

#TamilSchoolmychoice

தாக்குதலை உறுதிப்படுத்தி இந்தியத் தற்காப்பு அமைச்சு இன்று அதிகாலை 2.00 மணியளவில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இரவு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி கண்விழித்திருந்து இராணுவ நடவடிக்கைகளை அணுக்கமாகக் கண்காணித்து வந்தார் என்றும் ஊடகங்கள் தெரிவித்தன.

இன்று மே 7-ஆம் தேதி இந்தியா முழுவதும் முக்கிய நகர்களில் பாதுகாப்பு முன்னோட்ட தற்காப்புப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக இன்றைய முன்னோட்டப் பயிற்சிகளுக்குப் பின்னரே தாக்குதல்களை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அதிகாலையே தாக்குதல்களை இந்தியா நடத்தி, பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தது.

பாகிஸ்தானின் இராணுவ மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்றும் இந்தியத் தற்காப்பு அமைச்சின் அறிக்கை தெரிவித்தது.

பொதுமக்கள் இருக்கும் பகுதிகள் தவிர்க்கப்பட்டதாகவும் பயங்கரவாத முகாம்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதாகவும் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

இதற்கிடையில் இந்திய அமைச்சரவையின் பாதுகாப்பு குறித்த கூட்டத்திற்கு இன்று நரேந்திர மோடி தலைமை தாங்கினார். அதன் பின்னர் தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோருடன் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

இந்திய இராணுவத்தின் சார்பில் நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு பெண் அதிகாரிகள் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி விளக்கங்கள் அளித்ததும் வித்தியாசமான காட்சியாக அமைந்தது.