ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீரில் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நதியின் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-–காஷ்மீரின் பகல்காம் அருகே உள்ள பைசாரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் அண்மையில் கொல்லப்பட்டனர். அந்த சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா இந்த பதில் நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்த தாக்குதல் பாகிஸ்தான் ஆதரவுடன் பயங்கரவாதிகள் நடத்தியதாக குற்றச்சாட்டுகளை இந்தியா சுமத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, கடந்த 1960ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் நீர்மின்சார அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுகிறது.
அதேபோல், ரியாசி மாவட்டத்தில் சலால் அணையின் மதகுகளும் மூடப்பட்டன. வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதிக்கு குறுக்கே உள்ள கிஷன்கங்கா அணையில் இருந்து வெளியேறும் நதிநீரும் நிறுத்தப்பட்டுள்ளது.
சிந்து நதிநீர் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்திருக்கிறது.
சிந்து நதியில் தண்ணீர் வராவிட்டால் இந்தியர்களின் ரத்த ஆறு ஓடும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி (பிபிபி) தலைவர் பிலாவல் பூட்டோ ஜர்தாரி அண்மையில் பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.