கோலாலம்பூர் – பிகேஆர் கட்சிக்கான தேர்தல்களின் அதிகாரபூர்வ முடிவுகள் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் பிகேஆர் கட்சியின் தேசியப் பேராளர் மாநாட்டில் அறிவிக்கப்படவிருக்கும் நிலையில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட ரபிசி ரம்லி தோல்வியை ஒப்புக் கொண்டுள்ளார்.
அஸ்மின் அலி பிகேஆர் கட்சியின் தேசியத் துணைத் தலைவராக வெற்றி பெற்றிருந்தாலும், அவருக்கு எதிராக ஒரு வலுவான போட்டிக் களத்தை உருவாக்கியவர் என்ற முறையில் தனது பிரச்சார பலத்தையும், ஆதரவு பலத்தையும் பிகேஆர் கட்சியிலும், மலேசிய அரசியலிலும் ரபிசி நிலை நிறுத்தியுள்ளார்.
அதிலும், 14-வது பொதுத் தேர்தலில் போட்டியிடாதவர்- எந்த ஓர் அரசாங்கப் பொறுப்பிலும் இல்லாதவர் – என்பது போன்ற சாதகமற்ற அம்சங்களைப் பின்னணியாகக் கொண்டு, தனது கட்சியில் ஆற்றிய கடந்த கால பணிகள், தேசிய உதவித் தலைவர் என்ற பதவி, மலேசிய அரசியலில் முன்னெடுத்த ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆகிய அம்சங்களை மட்டுமே முன்னிறுத்தி வெற்றியின் விளிம்பைத் தொட்டிருக்கிறார் ரபிசி.
அஸ்மின் அலியோ, நடப்பு துணைத் தலைவர் என்ற பதவி பலம் ஒருபுறமிருக்க, இரண்டு தவணைகள் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி, தற்போது மத்திய அமைச்சர் என்ற பதவி ஆகிய வலுவான பின்னணிகளுடன் தனது பதவியைத் தற்காத்துக் கொள்ள போட்டியில் இறங்கினார்.
இருவருக்கும் இடையில் இருக்கும் வாக்குகள் வித்தியாசம் சில ஆயிரங்கள் மட்டுமே – வெறும் 2 விழுக்காடு மட்டுமே – என்பது ரபிசி நிரூபித்திருக்கும் அவரது பலம். அஸ்மின் அலிக்குக் கட்சியில் பெரும்பான்மை பலம் இல்லை – அதிலும் அன்வார் இப்ராகிமின் குடும்பத்தினரின் ஆதரவு இல்லை என்பது நடந்து முடிந்த பிகேஆர் தேர்தல்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும் ஒரு ‘மாபெரும்’ உண்மை.
அஸ்மின் அலியும் தனது வெற்றிக் கொண்டாட்டத்தின் இடையில் “ரபிசி நீண்ட காலம் பிகேஆர் கட்சியில் பாடுபட்டவர். ரிபோர்மாசி எனப்படும் சீர்திருத்தப் போராட்டத்தின் தன்மையையும் பின்னணியும் நன்கு அறிந்தவர். எனவே, சகோதரர் ரபிசியுடன் இணைந்து பிகேஆர் கட்சியின் வளர்ச்சிக்காகப் பாடுபடுவேன். அவரைப் புறக்கணிக்க மாட்டேன்” எனக் கண்ணியத்துடன் அறிவித்திருக்கிறார்.
பிகேஆர் கட்சி மத்திய அரசாங்கத்தைக் கைப்பற்றியிருக்கும் நிலையில் அந்தக் கட்சியின் உண்மையான பயணமும், சவால்களும், இனிமேல்தான் தொடங்கப் போகின்றன என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
கட்சியின் தேசியத் தலைவராக அன்வார் இப்ராகிம், துணைத் தலைவராக அன்வாருடனும், அன்வாரின் குடும்பத்தினருடனும் சுமுகமான இணக்கம் இல்லாத அஸ்மின் அலி, உதவித் தலைவராக அன்வாரின் மகள் நூருல் இசா, அன்வார் பிரதமரானால் துணைப் பிரதமர் பதவியை விட்டுத் தரப்போகும் வான் அசிசா – இந்த சூழ்நிலையில் பிகேஆர் கட்சியின் வளர்ச்சியும், உட்கட்சிப் பிரச்சனைகளும் இனி எவ்வாறு கட்டமைக்கப்படும், கட்சி எந்தத் திசையில் போகும் என்பது போன்ற கேள்விகளுக்கு இனிமேல்தான் பதில்கள் கிடைக்கத் தொடங்கும்.
போட்டியில் தோற்றாலும், ரபிசி ரம்லிக்கு கட்சியிலோ, அரசாங்கத்திலோ முக்கியப் பதவி வழங்கப்பட்டு, அஸ்மின் அலிக்கு எதிரான ஒரு களத்தை அவர் தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவருடன் நூருல் இசாவும், அன்வாரின் குடும்பத்தினரும் இணைந்து, பிகேஆர் கட்சியில் தங்களின் ஆதிக்கத்தையும், செல்வாக்கையும் தொடர்ந்து நிலைநிறுத்த அரசியல் ரீதியாக வியூகம் வகுத்துப் பாடுபட்டு வருவார்கள் எனவும் எதிர்பார்க்கலாம்.