கோலாலம்பூர்: பிகேஆர் கட்சித் தேர்தலில் உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதாக சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் அறிவித்துள்ளார்.
“இது வெறும் வேட்புமனு அல்ல. இது ஒரு நிலைப்பாடு. சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்ட இயக்கத்தில் எனது நீண்ட பயணத்தின் முழு பொறுப்பை உணர்ந்தவண்ணம், நான் கட்சித் தேர்தலில், மக்கள் நீதி கட்சியின் (பிகேஆர்) உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுகிறேன்” என இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் யுனேஸ்வரன் குறிப்பிட்டார்.
“இளம் தலைமுறையைச் சேர்ந்த ஒருவராகவும், இக்கட்சியுடன் எனது இளமைக் காலத்திலிருந்தே இணைந்த பயணத்தின் காரணமாகவும் – நான் நம்புவது – பிகேஆர் என்பது புதிய தலைமுறையின் உயர்ந்த கனவுகளுக்கும், பழைய தலைமுறையின் அனுபவ ஞானத்திற்கும் இடையே ஒரு பாலமாக இருக்க வேண்டும். நாம் மாற்றங்களுக்காகக் காத்திருக்க முடியாது; அந்த மாற்றங்களின் ஒரு பகுதியாக நாமே இருக்க வேண்டும்” என்றும் யுனேஸ்வரன் தன் அறிக்கையில் தெரிவித்தார்.
2023–2025 தவணைக்கான மத்திய செயலவையின் உறுப்பினராக, நான் தெளிவான அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான மனதுடன் வந்துள்ளேன் என்றும் குறிப்பிட்ட யுனேஸ்வரன், கட்சியின் உச்ச தலைமைத்துவத்தின் மேலாண்மையில் மேலும் அர்த்தமுள்ள பங்களிப்பை தொடரவும், மக்கள் நம்பிக்கையுடன் இணைந்து, பிகேஆர் ஒரு உண்மையான, பொருத்தமான மற்றும் நம்பகமான போராட்ட மேடையாக தொடர வேண்டும் என்றும் தன் அறிக்கையில் குறிப்பிட்டார்.
“தலைமை என்பது பதவி வகிப்பது மட்டுமல்ல! அது பொறுப்பு சம்பந்தப்பட்ட விஷயமாகும். நான் மிகவும் பணிவுடன் உங்கள் ஆதரவை நாடுகிறேன். நான் போட்டியிடுவது எனது பதவிக்காக – பெயருக்காக மட்டும் அல்ல. நாம் அனைவரும் ஒன்றாக காக்கும் நியாயம் மற்றும் கொள்கைக்காக” எனத் தெரிவித்த யுனேஸ்வரன் “பிகேஆர் அனைத்து இனங்களுக்குமான ஒரே கட்சி! அனைவரும் இணைந்து போராட்டத்தைத் தொடர்வோம்” என்றும் குறிப்பிட்டார்.