வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் (படம்), புரோஸ்டேட் என்னும் புற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார். மிகத் துரிதமாகப் பரவும் ஆற்றல் வாய்ந்த ரகத்திலான புற்றுநோய் அவரைப் பாதித்துள்ளதாக அவரின் அலுவலகம் அறிவித்தது. புற்றுநோய், அவரின் எலும்புகளுக்கும் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
82 வயதான ஜோ பைடனுக்கு புற்றுநோய் பீடித்திருப்பதாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அதிபர் டொனால்ட் டிரம்ப் “அவர் விரைவாக நலம் பெற்று திரும்ப வேண்டும்” என பதிவிட்டார்.
“நம் அனைவரையும் புற்றுநோய் பீடிக்கும்” என ஜோ பைடன் தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில் பதிவிட்டார்.
2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் அப்போதைய குடியரசுக் கட்சி அதிபர் டொனால்ட் டிரம்பைத் தோற்கடித்துப் பதவிக்கு வந்தவர் ஜோ பைடன். 2024 தேர்தலில் மீண்டும் அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட டிரம்ப், இந்த முறை மீண்டும் பைடனுடன் மோதினார். எனினும், அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடர்ந்து கொண்டிருந்த கட்டத்தில் பைடன் போட்டியிலிருந்து விலக, அவருக்குப் பதிலாக கமலா ஹாரிஸ் களத்தில் குதித்தார். எனினும் இறுதியில் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார்.
ஜோ பைடனுக்கு எந்த விதமான சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டும் என அவரின் குடும்பத்தினர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.