சென்னை: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் தமிழ் எழுத்துருக் கூடமும், சிங்கப்பூரைச் சேர்ந்த ஒண்மை அமைப்பும் இணைந்து தமிழ் எழுத்துரு உருவாக்கம் குறித்த இரண்டு நாள் பயிலரங்கமும் கருத்தரங்கமும் நடத்தினர்.
கடந்த மே 16,17-ஆம் தேதிகளில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இரண்டாவது ஆண்டாக நடத்தப்படும், இந்நிகழ்ச்சியில் செல்லினம், முரசு அஞ்சலின் நிறுவனர் முத்து நெடுமாறன் பயிற்சிகளை வழங்கினார்.
நாள் 1 – பயிலரங்கு
முதல் நாள் பயிலரங்கில் பதிவு செய்தோர் மட்டும் பங்கேற்றனர். எழுத்துரு உருவாக்கத்தை மிக எளிமையான செயல்முறை ஆக்கியிருக்கும் கிளிப்ஸ் மென்பொருள், பயிலரங்கில் பயன்படுத்தப்பட்டது. பயிற்சியில் கலந்தகொண்டோருக்கு இம்மென்பொருள் குறிப்பிட்ட காலத்துக்கு இலவசமாக வழங்கப்பட்டது. கிளிப்ஸ் மென்பொருளில் எழுத்துரு உருவாக்குவது பற்றி முத்து நெடுமாறன் விளக்கினார். அவர் அறிவுறுத்தல்படி பங்கேற்பாளர்கள் எழுத்துரு உருவாக்கத்தின் முதற்படிக்குள் நுழைந்தனர். கிளிப்ஸ் மென்பொருளின் திறமான செயலாக்கம், தமிழ் எழுத்துரு ஆக்கத்தில் உள்ள தனித்துவமான அம்சங்களைப் பற்றி முத்து நெடுமாறன் எடுத்துரைத்ததும் அரங்கம் கைத்தட்டல்களால் அதிர்ந்தது.
எழுத்தாளர்கள், வடிவமைப்புக் கலைஞர்கள், மென்பொருள் ஆர்வலர்கள் எனப் பல துறைகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் ஆர்வத்துடன் கற்பனை எல்லைகளை விரிவாக்கித் தமிழ் எழுத்துருக்களை உருவாக்கினர். காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்த பயிலரங்கம், முத்து நெடுமாறனின் ஒரு மணி நேர சிறப்புரையுடன் நிறைவடைந்தது.
சீன காலிகிராபி தூரிகை கொண்டு அவர் உருவாக்கிய கீற்று எழுத்துரு, பழங்கால திரைப்பட வடிவமைப்பிலிருந்து அவர் உருவாக்கிய அறிவு எழுத்துரு, குழந்தைகளுக்கான ஆம்பல் எழுத்துரு போன்றவற்றைக் காட்டி, அதன் நுணுக்கங்களை முத்து நெடுமாறன் விளக்கினார். தமது ஹைபிஸ்கஸ் உள்ளிட்ட மென்பொறிகளைக் காட்சிப்படுத்தி விளக்கினார்.
நிகழ்வில் பங்கேற்ற சுமன் கிஷன் என்ற வடிவமைப்புக் கலைஞர், மாறுபட்ட வடிவத்தில் தான் உருவாக்கிய எழுத்துருவைக் காட்சிப்படுத்தினார். வர்ஷா என்ற கலைஞர், 247 தமிழ் எழுத்துகளுக்கும் தாம் வரைந்த நவீன எழுத்துரு ஓவியங்களைக் காட்சிப்படுத்தினார்.
நாள் 2 – கருத்தரங்கு
தமிழ் எழுத்துரு உருவாக்கம் கருத்தரங்கின் இரண்டாவது நாளில் பல்வேறு ஆளுமைகள் பங்கேற்று உரையாற்றினர். நிகழ்வின் தொடக்கத்தில் ஐஐடி மும்பையில் உள்ள வடிவமைப்புத் துறையின் பேராசிரியரும் காலிகிராபி கலைஞருமான பேராசிரியர் ஸ்ரீகுமார் உரையாற்றினார்.
இந்திய மொழிகளின் எழுத்துகள் ஊடாக காலிகிராபி என்ற பொருண்மையில் அவர் பேசியபோது வடிவமைப்பு மற்றும் கலை ஆகிய இரண்டு அம்சங்களுக்கு நடுவில் இருப்பதே காலிகிராபி என்று குறிப்பிட்டார். அதற்கு அழகியல், செயலாக்கம் இரண்டும் இணைந்ததுதான் காலிகிராபியின் உளவியல் என்று பேசினார். இந்தியாவின் காலிகிராபி வல்லுநர்களையும், அத்துறையின் முன்னோடிகளையும் பட்டியலிட்டார். ஆர்.கே ஜோஷி, அச்சுத் பாலவ், பரமேஸ்வரன் ராஜூ, நாராயண பட்டாத்ரி போன்ற கலைஞர்களையும், அவர்களது பலதரப்பட்ட காலிகிராபி படைப்புகளையும் காட்சிப்படுத்தினார்..
அடுத்ததாகப் பேசிய ஓவியர் மணிவண்ணன், ‘லிபி – எழுத்துச் சித்திரங்களும் மொழிகளும்’ என்ற தலைப்பில் உரையாற்றினார். ஒரு வரலாறு வாய்மொழியாகக் கடத்தப்படும்போது சந்திக்கும் திரிபுகளை எழுத்துமூலம் கடத்தப்படும்போது தவிர்க்கிறோம் என்று குறிப்பிட்ட அவர், எழுத்து என்பது ஓவியத்தின் கூறு என்று நிறுவினார்.
ஓவியராகத் தொடங்கிய பயணம் எப்படி வரைபடக் கலைஞராகவும், எழுத்துரு வடிவமைப்பாளராகவும் பரிணமித்தது என்பதைக் காட்சிப் படங்களோடு விளக்கினார்.
கல்வெட்டு எழுத்துகளைப் புத்தகங்களின் அட்டைப்படங்கள் ஆக்கிய கதைகளை விவரித்தார். தான் வடிவமைத்த புத்தக அட்டைப்படங்கள் பலவற்றைக் காட்சிப்படுத்தி, அவற்றின் தலைப்புகளைப் புத்தக உள்ளடக்கம், பெயர்களில் இருந்து எடுத்து வரைந்துள்ளமை குறித்துப் பேசினார். புத்தகத்தின் கதையாடலை அட்டைப் படத்திலிருந்தே தொடங்கும் உத்தியை விவரித்தார்.
பின்னர் தமிழ் எழுத்துருக் கூடத்தின் தலைவர் ரஞ்சித் உரையாற்றினார். தமிழ் எழுத்துகளின் கூறியல் குறித்து அவர் பேசினார். ஆங்கில எழுத்துரு உருவாக்கத்திற்கும் தமிழ் எழுத்துருக்களுக்கும் உள்ள ஒற்றுமையையும் வேறுபாட்டையும் விளக்கினார். தமிழ் எழுத்துருக்களின் அமைப்பு முறைகளைப் பட்டியலிட்டார்.
தமிழ் எழுத்துருக்களில் ஏற்றம், சரிவு, உள்வெளி, இணைப்பு, முனை, சந்திப்பு, இகர ஈகாரக் கொக்கிகள் போன்றவற்றைக் காட்சிப்படுத்தினார். ச என்ற எழுத்துக்கு மூக்கும் நாக்கும் இருப்பதைச் சுட்டிக் காட்டினார். க என்ற எழுத்துக்கு இருக்கும் இடுப்புப் பகுதியையும், ழ என்ற எழுத்தில் உள்ள கொக்கியையும் விளக்கினார். தொடர்ந்து கட்டெழுத்துரு எனப்படும் body fonts உருவாக்கத்தின் தேவையையும், அதற்கு தமிழ் எழுத்துருக் கூடம் மேற்கொண்டுள்ள முயற்சியையும் குறிப்பிட்டார். எழுத்துரு மீட்டுருவாக்கத்தில் தமிழ் எழுத்துருக் கூடம் ஆற்றி வரும் பணிகளைப் பட்டியலிட்டு விளக்கினார். வரலாற்றில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்களை மீட்டுருவாக்கும்போது உள்ள சிக்கல்களையும், தம் குழு எதிர்கொண்ட சவால்களையும் விவரித்தார்.
ரஞ்சித்தைத் தொடர்ந்து அவரது குழுவின் உறுப்பினரான பிரபஞ்சா ஆனந்த்குமார், தமிழ் எழுத்துருக்களின் இடையில் உள்ள இடைவெளிகள் பற்றி விரிவான உரையை வழங்கினார். எழுத்துரு ஆக்கத்தில் முக்கியமான ஸ்பேசிங் மற்றும் கெர்னிங் பற்றி விளக்கம் அளித்தார். எழுத்துகளுக்கு இடையில் இடைவெளி அதிகமாக இருந்தால் சொற்களை அறிந்து கொள்ள நேரம் எடுக்கும் என்பதையும், இடைவெளி குறுகலாக இருந்தால் வாசிக்க முடியாது என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். தமிழ் எழுத்துகளின் உருவ அமைப்புகளை வட்டம், சதுரம், முக்கோணம் ஆகிய வடிவங்களுடன் தொடர்புப்படுத்திக் காட்சிப்படுத்தினார்.
கருத்தரங்கின் இறுதிப் பேச்சாளராக உரையாற்றிய வடிவமைப்பாளர் ரோடா அலெக்ஸ், தமிழ், ஆங்கில எழுத்துருக்களுக்கு இடையே உள்ள எழுத்தமைதி குறித்துப் பேசினார். இளையராஜாவின் இசைக்கோவையிலிருந்து உரையைத் தொடங்கிய அவர், பார்வையாளர்களைக் கவரும் வகையில் களிநயமான படங்களைக் காட்சிப்படுத்தி உரையாற்றினார். தான் வடிவமைத்த பக்கத்தில் ஓர் எழுத்து சரியாக வராமல் போனாலும் தமக்குச் சங்கடமாய் இருக்கும் என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார். வடிவமைப்பு துறையில் உள்ள சிக்கல்களை எழுத்துருப் பொறியாளர்களுக்கு விளக்கினார். அவரைத் தொடர்ந்து பேசிய எழுத்தாளர் கோகிலா, எழுத்துலாவின் முன்னெடுப்பு குறித்து சுருக்கமாகப் பேசினார்.
நிறைவில் ஒண்மை அமைப்பின் நரேந்திரன் நன்றியுரை கூறினார். இரண்டு நாள்கள் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்றவர்கள், தமிழ் எழுத்துரு வளர்ச்சியின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கும் வரலாற்று நிகழ்வின் அங்கமாகினர்.
– விவேக்பாரதி