Home நாடு ரபிடா அசிஸ் பழைய ஊழல்களைப் பட்டியலிடும் மலேசியா டுடே!

ரபிடா அசிஸ் பழைய ஊழல்களைப் பட்டியலிடும் மலேசியா டுடே!

1033
0
SHARE
Ad
டான்ஸ்ரீ ரபிடா அசிஸ்

கோலாலம்பூர் – ‘இக்குனோமிட்டி’ என்ற ஜோ லோவின் உல்லாச ஆடம்பரப் படகை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியாததைச் சுட்டிக் காட்டி முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ரபிடா அசிஸ் பிரதமர் நஜிப்பின் அரசாங்கத்தையும், நமது அமுலாக்க அதிகாரிகளின் கையாலாகத்தனத்தையும் கடுமையாக விமர்சித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய இணைய எழுத்தாளர் ராஜா பெத்ரா கமாருடின் கடந்த இரண்டு நாட்களாக ரபிடா அசிசைத் தாக்கியும், அவரது பழைய ஊழல்கள் என சில விவகாரங்களையும் அம்பலப்படுத்தி மலேசியா டுடே இணைய ஊடகத்தில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

ராஜா பெத்ரா கமாருடின்

இதே ராஜா பெத்ராதான் கோடீஸ்வரர் ரோபர்ட் குவோக் குறித்த கட்டுரையை வெளியிட்டு நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தினார். பின்னர் அந்தக் கட்டுரைகள் பல்ஊடக ஆணையத்தின் உத்தரவால் நீக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

மலேசியா டுடே ஊடகத்தில் வரிசையாக வெளியிடப்பட்ட கட்டுரைகளின் கீழ்க்காணும் தலைப்புகளைப் பார்த்தாலே ராஜா பெத்ராவின் உள்நோக்கத்தை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்:

  • மகாதீர் ஊழல் புரிகிறார் என்பதை ரபிடா அம்பலப்படுத்தினார்
  • ரபிடா ‘ஏபி’ பெர்மிட்டுகளின் இராணி (ஏபி பெர்மிட் என்பது வெளிநாட்டுக் கார்களை இறக்குமதி செய்ய வழங்கப்படும் சிறப்பு அரசாங்க அனுமதி. ரபிடா அமைச்சராக இருந்த காலத்தில் வேண்டியவர்களுக்கு இந்த அனுமதிகளை நிறைய வழங்கினார் என்ற சர்ச்சை எழுந்ததுண்டு).
  • ஏர் ஆசியா நிறுவனத்தில் ரபிசா அசிசுக்கு எவ்வளவு பங்குகள் உள்ளன?
  • லிம் கிட் சியாங்-ரபிடா, இருவரில் யார் பொய் சொல்கிறார்? (இந்தக் கட்டுரையில் 2005-ஆம் ஆண்டில் ரபிடா மீதான ஏபி பெர்மிட் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தபோது, லிம் கிட் சியாங் சாற்றிய குற்றச்சாட்டுகளை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கிறார் ராஜா பெத்ரா)

ஒருகாலத்தில் பக்காத்தானுக்கு ஆதரவாக மேடைப் பிரச்சாரங்களோடு ஆதரவாகவும் எழுதி வந்த ராஜா பெத்ரா அண்மையக் காலங்களில் வெளிநாட்டில் இருந்து கொண்டு அம்னோவுக்கு ஆதரவாகவும், நஜிப்புக்கு ஆதரவாகவும் கட்டுரைகள் எழுதி வருகிறார்.

நஜிப் மீதான எதிர்ப்புக் குரல்கள் வலுத்துவிடாமல் இருக்கவே, ரபிடா அசிஸ் போன்ற முன்னாள் தலைவர்கள் நஜிப்புக்கு எதிராக வாய் திறந்தால் அவர்களுக்கு எதிரான பதில் தாக்குதல் கட்டுரைகளை ராஜா பெத்ரா மலேசியா டுடே மூலம் வெளியிடுவதாகக் கருதப்படுகிறது.

-இரா.முத்தரசன்