கோலாலம்பூர் : 2018 பொதுத் தேர்தல் முடிந்து துன் மகாதீர் பிரதமரானதும் நஜிப் துன் ரசாக் தொடர்புடைய இல்லங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளுக்குத் தலைமை தாங்கியவர் டத்தோஸ்ரீ அமார் சிங் என்னும் உயர்நிலை காவல் துறை அதிகாரி.
அந்த காலகட்டத்தில் தினமும் தலைப்புச் செய்தியானார் அமார் சிங். அவர் பதவி ஓய்வு பெற்ற பின்னரும் அவரின் பதவிக் காலம் விசாரணைகளை முடிப்பதற்காக மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
அதன் பின்னர் ஓய்வு பெற்று எங்கிருக்கிறார் என்பது தெரியாமல் அமைதியான குடும்ப வாழ்க்கை நடத்தியவர் மீண்டும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியிருக்கிறார்.
இலண்டனில் வாழும் இணைய ஊடகவியலாளர் ராஜா பெத்ரா கமாருடின் ஒரு தகவலை வெளியிட்டிருந்தார். நஜிப் இல்லத்தில் அதிரடி சோதனை நடத்தப்பட்டபோது, அமார் சிங்கின் காதலியும் அங்கிருந்தார் என்றும் நஜிப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட பெட்டிகளில் ஒன்றை அந்தக் காதலி எடுத்துச் சென்றார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார் ராஜா பெத்ரா.
அதைத் தொடர்ந்து ராஜா பெத்ரா மீது காவல் துறையில் புகார் ஒன்றை அமார் சிங் இன்று செய்திருக்கிறார்.