Home உலகம் கோத்தாபாயா தாய்லாந்து வந்தடைந்தார்

கோத்தாபாயா தாய்லாந்து வந்தடைந்தார்

928
0
SHARE
Ad
கோத்தாபாய ராஜபக்சே

பாங்காக் : இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) தாய்லாந்து தலைநகர் வந்தடைந்தார் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இலங்கையிலிருந்து மக்கள் போராட்டத்தினால் தப்பியோடிய கோத்தாபாய  ராஜபக்ச தென்கிழக்காசியாவில் தஞ்சமடையும் இரண்டாவது நாடு தாய்லாந்து ஆகும்.

சிங்கப்பூரிலிருந்து, தனியார் வாடகை விமானம் ஒன்றில் கோத்தாபாய  ராஜபக்ச பாங்காக்கின் டோன் முவாங் விமான  நிலையம் வந்தடைந்தார். அவர் சிங்கையிலிருந்து வெளியேறிவிட்டதாக சிங்கப்பூர் குடிநுழைவு இலாகா அதிகாரபூர்வமாக அறிவித்தது.

#TamilSchoolmychoice

தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருக்கப் போகும் கோத்தாபாய  ராஜபக்ச நிரந்தரமாக அங்கேயே தங்க தாய்லாந்து அனுமதிக்குமா என்பது இனிமேல்தான் தெரியவரும்.

கோத்தாபாய  ராஜபக்சவை அனுமதித்த தாய்லாந்து

இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தாபாய  ராஜபக்சவை தனது நாட்டிற்குள் நுழைய அனுமதிக்குமாறு தற்போதைய இலங்கை அரசாங்கத்திடமிருந்து தாய்லாந்து கோரிக்கையைப் பெற்றுள்ளது என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் டானி சங்ராட் புதன்கிழமை (ஆகஸ்ட் 10) தெரிவித்தார்.

பொருளாதார சரிவைத் தொடர்ந்து ஜூலை மாதம் நடந்த மக்கள் போராட்டங்களுக்குப் பிறகு அவர் நாட்டை விட்டு மாலைத் தீவுகளின் வழியாக சிங்கப்பூருக்கு ஜூலை 14-ஆம் தேதி தப்பிச் சென்றார்.

தாய்லாந்து இலங்கையுடனான உறவின் அடிப்படையில் இந்த கோரிக்கையை பரிசீலித்துள்ளதாக டானி கூறினார். ராஜபக்சவின் இந்த நடவடிக்கை தற்காலிகமாக தங்கியிருப்பதற்காக எனக் கருதப்படுகிறது.

“இலங்கையின் முன்னாள் அதிபர் தாய்லாந்தில் நிரந்தரமாக தங்குமிடம் தேட விரும்பவில்லை, விரைவில் அவர் வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வார்” என்று இலங்கை அரசாங்கத்தை மேற்கோள் காட்டி அவர் கூறினார்.

எப்போதும் இல்லாத அளவுக்கு இலங்கையின் மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் ஜனாதிபதியின் அதிகாரத்துவ இல்லம் மற்றும் அலுவலகத்தை முற்றுகையிட்டதை அடுத்து, ஜூலை மாதம் ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

ஜூலை 14 அன்று மாலத்தீவு வழியாக சிங்கப்பூருக்குத் தப்பிச் சென்ற ராஜபக்ச தென்கிழக்கு ஆசியாவில் அடைக்கலம் புகுந்துள்ள இரண்டாவது நாடு தாய்லாந்து ஆகும். அவர் அரச தந்திர கடவுச் சீட்டை (Diplomatic Passport) பெற்றிருப்பதால் அந்த நாட்டில் அவர் 90 நாட்கள் வரை தங்கியிருக்க அனுமதிக்கப்படுவார்.