Home நாடு ரபிடா அசிசின் சாடல் : அம்னோவில் நஜிப்புக்கு எதிராக போர்க்குரல்கள்!

ரபிடா அசிசின் சாடல் : அம்னோவில் நஜிப்புக்கு எதிராக போர்க்குரல்கள்!

1194
0
SHARE
Ad
டான்ஸ்ரீ ரபிடா அசிஸ்

கோலாலம்பூர் – பொதுத் தேர்தலுக்கு முன்பாக அம்னோ தலைவர் பதவியிலிருந்து பிரதமர் நஜிப் துன் ரசாக் விலகிக் கொள்ள, புதிய தலைமைத்துவத்தின் கீழ் தேசிய முன்னணி பொதுத் தேர்தலைச் சந்திக்கும் என்ற ஆரூடங்களை ஒரு சில தரப்புகள் எப்போதும் கூறி வந்துள்ளன.

பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இனியும் அது சாத்தியமில்லை என்றாலும், அம்னோவின் முன்னாள் தலைவர்கள், பொதுத் தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஆகியோர் இணைந்து பிரதமருக்கான எதிரான ஓர் அழுத்தத்தை – நெருக்குதலை வழங்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

அந்த வகையில் அண்மையில் முன்னாள் அம்னோ மகளிர் தலைவியும், முன்னாள் அமைச்சருமான டான்ஸ்ரீ ரபிடா அசிஸ் நஜிப் அரசாங்கத்தைத் தாக்கி வெளியிட்ட கட்டுரை முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

இக்குனாமிட்டி என்ற ஜோ லோவின் உல்லாசக் கப்பலைக் கண்டுபிடிக்க முடியாத அரசாங்கத்தின் மெத்தனத்தைக் கடுமையாகச் சாடி “அந்தக் கப்பலை என்னால் கண்டுபிடிக்க முடியும்போது உங்களால் முடியாதா?” என ரபிடா அசிஸ் கேள்வி தனது முகநூல் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

அந்தக் கட்டுரையின் சில பகுதிகளைக் கண்ணோட்டமிட்டால் நேரடியாகவே ரபிடா அசிஸ் நஜிப் அரசாங்கத்திற்கு எதிராக சில கருத்துகளைத் துணிந்து கூறியிருப்பது – அதுவும் பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் கூறியிருப்பது – புலப்படும்.

ரபிடா அசிஸ் கூறியது என்ன?

‘இக்குனாமிட்டி’ என்ற பெயர் கொண்ட 1எம்டிபி சர்ச்சையில் சிக்கியிருக்கும் வணிகர் ஜோ லோவின் உல்லாசக் கப்பலை மலேசிய அதிகாரிகள் கண்டுபிடிக்க முடியாதது குறித்து தனது முகநூல் பக்கத்தில் சாடியிருக்கும் முன்னாள் அம்னோ அமைச்சர் டான்ஸ்ரீ ரபிசா அசிஸ், அதைத் தானே ஒரு முறை கண்டுபிடித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

“உலகம் முழுவதும் ஊடகங்கள் அந்த உல்லாசப் படகைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்க மலேசியாவின் மைய ஊடகங்கள் அதுகுறித்து மௌனம் சாதித்தன. இந்தோனிசிய அதிகாரிகள் அந்தப் படகைக் கண்டுபிடித்துக் கைப்பற்றினர் என்பதைப் படித்து மேலும் ஆச்சரியப்பட்டேன். நமது சொந்த அமுலாக்க அதிகாரிகள் என்ன ஆயினர்? உண்மையிலேயே அந்தப் படகைத் தேடும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனரா?” என்றும் அடுக்கடுக்காக ரபிடா அசிஸ் கேள்விகளைத் தொடுத்துள்ளார்.

உலகத்தின் பார்வையில் மலேசிய அரசாங்கம் எந்த அளவுக்கு செயலிழந்த நிலையில் இருக்கிறது என்பதை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியிருக்கிறது என்றும் சாடியிருக்கும் ரபிடா அசிஸ், ஒரு வருடத்திற்கு முன்னால் தானே அந்த உல்லாசப் படகைக் கண்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

“ஒருமுறை தாய்லாந்தில் முக்குளிப்பில் (டைவிங்) நான் ஈடுபட்டிருந்தபோது, நாங்கள் சென்று கொண்டிருந்த படகில் பொருத்தப்பட்டிருந்த பயணப் பாதையைக் காட்டும் கருவி (Automatic Identification System) மூலம் இக்குனாமிட்டி துல்லியமாக கடலின் எந்தப் பகுதியில் நங்கூரமிட்டு நின்று கொண்டிருக்கிறது என்பதை என்னால் கண்டறிய முடிந்தது. தாய்லாந்தின் புக்கெட் கடல் பகுதியில் மிக நெருக்கமான தூரத்தில் இக்குனாமிட்டி படகை நானே புகைப்படங்களும் எடுத்தேன். அன்றிரவு புக்கெட்டில் அணிவகுத்து நிறுத்தப்பட்டிருந்த உல்லாசப் படகுகளின் மத்தியில் இக்குனாமிட்டியோடு உடன் வரும் சிறுபடகைக் கூட பார்த்தேன்” என்று ரபிடா தனது முகநூல் பதிவில் தெரிவித்திருக்கிறார்.

தான் எடுத்த புகைப்படங்களையும் தனது முகநூலில் ரபிடா வெளியிட்டிருக்கிறார்.

“அன்றிரவு அந்தப் பகுதியில் இருந்தவர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது, இக்குனோமிட்டி இங்கு கடல் பகுதியில் நங்கூரமிட்டிருக்கிறது. அதன் உள்ளே இருப்பவர்களுர் விருந்தினர்களும் இரவு நேரத்தில்தான் மேல்பகுதிக்கு வருவார்கள் என்று அங்குள்ளவர்கள் கூறினர். அன்றிரவு அந்தப் படகில் உள்ளவர்கள் வேலண்டைன்ஸ் டே எனப்படும் காதலர் தினக் கொண்டாட்டத்தில் இருந்தனர் என்றும் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது” என்றும் கூறியிருக்கும் ரபிடா அசிஸ்,

கடலில் முக்குளிக்கும் எங்ஙகளைப் போன்ற சாதாரணமானவர்களே இக்குனாமிட்டியைக் கண்டுபிடிக்க முடியும்போது, கணினி மயமான இத்தனை வசதிகளைக் கொண்ட அரசாங்க அமுலாக்க அதிகாரிகளால் முடியாதா என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இக்குனாமிட்டி யாருக்குச் சொந்தம்?

ரபிடா அசிஸ் முகநூலில் வெளியிட்டிருக்கும் இக்குனாமிட்டி புகைப்படங்கள்

இக்குனாமிட்டி என்ற அந்த ஆடம்பர உல்லாசப் படகு யாருக்கு சொந்தம் என்பது குறித்த சர்ச்சைக்கும் ரபிடா அசிசே விளக்கம் தந்திருக்கிறார்.

“யாரோ ‘ஒருவர்’ அந்தப் படகு ஜோ லோவுக்குச் சொந்தமானது என்பதற்கு ஆதாரமில்லை என்று கூறியிருந்தார். (அமைச்சர் சாலே கெருவாக்தான் அவ்வாறு கூறியிருந்தார்) அதற்கும் கூகுளில் தேடியபோது விடை கிடைத்தது” எனக் குறிப்பிட்டிருக்கும் ரபிடா,

அந்த இணையத் தளத்தின் முகவரியையும் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

https://www.superyachtfan.com/motor_yacht_equanimity.html

அந்த இணையத் தளத்தை பதிவிறக்கம் செய்தால் பின்வரும் தகவல்கள் கிடைக்கின்றன:-

“நமது நாட்டை நாமே இவ்வாறு அவமானப்படுத்தத் தேவையில்லை. கிளெப்டோகிராசி என அழைக்கப்படும், அரசாங்கப் பணத்தைச் சூறையாடும் தன்மைக்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு, சுவிட்சர்லாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் வழக்கு தொடுத்திருக்கின்றன. சிலர் சிறைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றனர். நிறுவனங்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. சில நிறுவனங்கள் செயல்படுவதிலிருந்து தடை விதிக்கப்பட்டிருக்கின்றன. சொத்துகளும், நில, கட்டட உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. முறைகேடாகப் பெற்ற பணத்திலிருந்து பரிசுகள் பெற்றவர்கள் அந்தப் பரிசுகளைத் திரும்ப ஒப்படைக்க முன்வருகின்றனர். அந்த உல்லாசப் படகின் புகழ்பெற்ற உரிமையாளரோடு இனி எந்த சகவாசமும் வேண்டாம் என ஒதுங்குகின்றனர். மக்களுக்காகவும், நாட்டுக்காகவும் முறையான நடவடிக்கைகள் எடுப்பதற்கு அரசாங்கத்திற்கு இதைவிட வேறு என்ன காரணங்கள் வேண்டும்?” என ரபிடா கேட்டிருக்கிறார்.

ரபிடாவின் இத்தகையக் கடுமையானச் சாடல்கள் பொதுத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேலும் இதுபோன்ற ‘வெடிப்புகள்’ ஆங்காங்கே நிகழலாம் என்பதையே நமக்கு உணர்த்துகின்றன.

-இரா.முத்தரசன்