Home நாடு “முன்பே இக்குவானிமிட்டியைப் பார்த்திருக்கிறேன்” – முன்னாள் அமைச்சர் ரஃபிடா தகவல்!

“முன்பே இக்குவானிமிட்டியைப் பார்த்திருக்கிறேன்” – முன்னாள் அமைச்சர் ரஃபிடா தகவல்!

1110
0
SHARE
Ad
படம்: ரஃபிடா அஜிஸ் ஃபேஸ்புக்

கோலாலம்பூர் – கடந்த ஆண்டு, தாய்லாந்தில் முக்குளிக்கும் பயிற்சியில் (Diving) ஈடுபட்டிருந்த போது, 1எம்டிபியின் சுரண்டப்பட்ட நிதியில் இருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படும் ‘இக்குவானிமிட்டி’ என்ற உல்லாசப் படகை தான் பார்த்ததாக முன்னாள் அமைச்சர் ரஃபிடா அஜிஸ் கூறியிருக்கிறார்.

இது குறித்து ரஃபிடா தனது ஃபேஸ்புக்கில் கூறியிருக்கும் தகவலில், “ஒராண்டுக்கு முன்பு, தாய்லாந்தில் முக்குளிக்கச் சென்ற போது, கடலில் இக்குவானிமிட்டி இருந்த இடத்தை எங்களது படகின் ஏஐஎஸ் (automatic identification system) உதவியுடன் துல்லியமாக அடையாளம் காண முடிந்தது.”

“எனது பயிற்றுவிப்பாளரின் படகை நான் தான் இயக்கி, கடலில் இக்குவானிமிட்டி எங்கே இருக்கிறது என்பதை அறிந்தேன்” என ரஃபிடா அஜிஸ் தனது ஃபேஸ்புக்கில் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மேலும், அன்றைய இரவு புக்கெட்டில் உள்ள மரினாவில், இக்குவானிமிட்டியை மிக நெருக்கமாகப் பார்க்க முடிந்ததோடு, தனிப்பட்ட முறையில் படம் மற்றும் காணொளியாகப் பதிவு செய்ததாகவும் ரஃபிடா குறிப்பிட்டிருக்கிறார்.

“நாங்கள் சாதாரண முக்குளிப்பாளர்கள், எங்களால் முடியும் போது, நமது அதிகாரிகளால் ஏன் அந்த உல்லாசப் படகைக் கண்டறியமுடியவில்லை?” என்றும் ரஃபிடா கேள்வி எழுப்பியிருக்கிறார்.

1எம்டிபியில் சுரண்டப்பட்ட நிதியில் இருந்து வாங்கப்பட்டதாக நம்பப்படும் தொழிலதிபர் ஜோ லோவின் 1 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள உல்லாசப் படகை கடந்த பிப்ரவரி 28-ம் தேதி, அமெரிக்க மத்திய குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளின் உத்தரவின் படி, இந்தோனிசிய அதிகாரிகள் பாலி தீவில் முடக்கினர்.

அமெரிக்க அதிகாரிகள் அந்த உல்லாசப்படகை முடக்க இயலும் போது, நமது மலேசிய அதிகாரிகளால் ஏன் அதனைக் கண்டறிய முடியவில்லை என்றும் ரஃபிடா கேள்வி எழுப்பியிருக்கிறார்.