லாஸ் ஏஞ்சல்ஸ் – தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் ‘பிளேட் ரன்னர்’ படத்துக்கு இரண்டாவது ஆஸ்கார் விருது கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே, திரைவடிவத்திற்கான சிறந்த தொழில்நுட்பத்தில் (விஷூவல் எபெக்ட்ஸ்) பிளேட் ரன்னர் 2049 ஆஸ்கார் விருதைப் பெற்றிருக்கிறது. இரண்டாவது விருது இந்தப் படத்தின் சிறந்த ஒளிப்பதிவுக்காக வழங்கப்பட்டிருக்கிறது.
2049-இல் நடைபெறுவதாக காட்டப்படும் பிளேட் ரன்னர் படம் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஹேரிசன் போர்ட் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற பிளேட் ரன்னர் படத்தின் தொடர்ச்சியாகும்.
கொக்கோ படத்துக்கு 2வது விருது – சிறந்த பாடல்
சிறந்த பாடலுக்கான விருதைப் பெற்றிருப்பதன் மூலம் கொக்கோ திரைப்படத்திற்கு இதுவரை 2 விருதுகள் கிடைத்திருக்கின்றன. ஏற்கனவே சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருதை கொக்கோ பெற்றது.
சிறந்த இயக்குநருக்கான விருது கில்லர்மோ டெல் தோரோ-வுக்குக் கிடைத்திருக்கிறது. ‘தெ ஷேப் ஆப் வாட்டர்’ படத்தை இயக்கியதற்காக அவருக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்படுகிறது.