லாஸ் ஏஞ்சல்ஸ் – (கூடுதல் தகவல்களுடன்) மலேசிய நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணியளவில் (அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை 4 மார்ச் 2018 இரவு) நடைபெற்று முடிந்த 90-வது ஆஸ்கார் விருதளிப்பு விழாவின் உச்சகட்டமாக முக்கியக் கதாபாத்திரத்தில் சிறந்த நடிகருக்கான விருதை கேரி ஓல்ட்மேன் பெற்றார்.
‘டார்க்கெஸ்ட் ஹவர்’ என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. ‘பேட்மேன்’, ‘பிளானட் ஆப் ஏப்ஸ்’ போன்ற பல ஆங்கிலப் படங்களில் சிறப்பான முறையில் நடித்து இரசிகர்களின் பாராட்டைப் பெற்றவர் இவர்.
சிறந்த நடிகை பிரான்சிஸ் மேக்டோர்மெண்ட்
முக்கியக் கதாபாத்திரத்தில் சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சிஸ் மேக்டோர்மெண்ட் பெற்றார். “திரி பில்போர்ட்ஸ் அவுட்சைட் எப்பிங், மிசோரி” என்ற படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
சிறந்த படம் – ஷேப் ஆப் வாட்டர்
இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுகளில் இறுதி விருதாக வழங்கப்பட்டது சிறந்த படத்திற்கான விருதாகும். “ஷேப் ஆப் வாட்டர்” என்ற திரைப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருது வழங்கப்பட்டது.
வழக்கமாக உலகம் முழுவதும் உள்ள சினிமா இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அளவுக்கு, பரபரப்போ, ஆர்வமும் இன்றி 2018-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருதளிப்பு விழா நடந்து முடிந்தது.
அதற்குக் காரணம், அவ்வளவாகப் பிரபலமில்லாத நடிகர் நடிகையருக்கு விருதுகள் வழங்கப்பட்டதும், வணிக ரீதியாக வெற்றி பெறாத – மக்களுக்கு அறிமுகமில்லாத சில படங்கள் – விருதுகளுக்கு முன்மொழியப்பட்டதும்தான் காரணங்களாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த ஆஸ்கார் விருதளிப்பின்போது இறுதி நேரத்தில் விருது பெறுபவர்களுக்கான கடித உறை மாறிய குழப்பம் ஏதும் இந்த முறை நேரவில்லை. கடித உறைகள் மாறுவது மீண்டும் நிகழாத வண்ணம் இருக்க மிகுந்த கவனம் செலுத்தியிருப்பதாகவும் மேலும் சில அடுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் எடுக்கப்பட்டதாகவும் ஆஸ்கார் பரிசளிப்பை நிர்வகிக்கும் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அறிவிப்பாளர் ஜிம்மி கிம்மல் பேசும்போது, கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் நடக்காது என்று கூறியதோடு, விருது பெறுபவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டதும் நீங்கள் ஒரு நிமிடம் தாமதமாக வருவது நல்லது என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
-செல்லியல் தொகுப்பு