Home நாடு ஜோ லோ நாடு திரும்பினால் மேலும் பல ஊழல்கள் வெளிவரும் – அன்வார் கூறுகிறார்!

ஜோ லோ நாடு திரும்பினால் மேலும் பல ஊழல்கள் வெளிவரும் – அன்வார் கூறுகிறார்!

67
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவிலிருந்து தப்பி ஓடிய தொழிலதிபர் ஜோ லோ (Jho Low) நாடு திரும்புவதை விரும்பாத சில தரப்புகள் உள்ளன – ஏனெனில் அவர் திரும்ப வந்தால் மேலும் பல ஊழல்கள் வெளிவரும் என்பதால் அந்தத் தரப்புகள் தயங்குகிகன்றன என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறினார்.

நாட்டில் ஆட்சித் துறைகளின் சீரமைப்பும், முறையேடான ஊழலை ஒழிப்பதும்தான் தற்போதைய தன் முக்கிய முன்னுரிமைகள் என்று அன்வார் தெரிவித்தார்.

அல்ஜசீரா தொலைக்காட்சி ஊடகத்தின் 101 ஈஸ்ட் (101 East) நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது, மலேசியாவில் உள்ள சில குழுக்கள் ஜோ லோவை நாடு திரும்ப வைக்க விரும்பவில்லை என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இவ்வாறு கூறினார்.

#TamilSchoolmychoice

“நான் ஆட்சி முறைகள், புரையோடிக் கிடக்கும் ஊழலை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இது பெரிய, கடினமான போராட்டம். இது 1எம்டிபி  விவகாரத்தில் துவங்கி முடிவடையும் ஒன்றல்ல,” என்று அவர் வலியுறுத்தினார்.

அவர் 2022ல் பிரதமராக பதவியேற்றவுடன், ஜோ லோவை கண்டறியும் நடவடிக்கையில் அனைத்து அமலாக்க நிறுவனங்களையும் ஈடுபடுத்த உத்தரவிட்டதாக அன்வார் தெரிவித்தார்.

“ஏனெனில் அவர் இந்த வழக்கில் முக்கியக் காரணமாக இருக்கிறார். அவரது சாட்சி இந்த வழக்கை முடிவுக்கு கொண்டு வர மிகவும் தேவையானதாகும்,” என்று அவர் கூறினார்.

ஜோ லோவை நாடு திரும்ப வைப்பது சிக்கலானதா எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது, அன்வார் “ஆமாம்” என பதிலளித்தார்.

லோ தற்போது சீனாவில் இருக்கிறாரா என்று கேட்கப்பட்டபோது, “இல்லை, அதை உறுதிப்படுத்த முடியவில்லை. எனினும் அவரின் சில நகர்வுகள் அங்கு உள்ளன என நாங்கள் சந்தேகிக்கிறோம். நான் மேலும் ஏதேனும் சொன்னால் இது மேலும் சிக்கலாகிவிடும்,” என்று அவர் விளக்கினார்.

ஜோ லோவுக்கு எதிராக அதிகமான ஆதாரங்கள் இருப்பதையடுத்து, அவரை நாடு திரும்ப வைப்பது இத்தனை கடினமாக ஏன் உள்ளது என்ற கேள்விக்கு அன்வார்,

“நாங்கள் அவரின் இருப்பிடம் தெரியாமல் இருக்கிறோம்,” என பதிலளித்தார்.

2023-இல், ஜோ லோவை திருப்பிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளை விரைவுபடுத்த பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அன்வார் தெரிவித்திருந்தார்.

கடந்த ஆண்டு, மலேசிய காவல்துறைத் தலைவர் டான் ஸ்ரீ ரசாருடின் ஹுசைன், ஜோ லோவை கண்டறிய காவல்துறை முழுமையாக ஒத்துழைக்கிறது என்றாலும், அவரது இருப்பிடத்துக்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.