சென்னை: தமிழ்ப்படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ‘தக் லைஃப்’. பிரபல இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். எப்போதும் அழகான தமிழில் பெயர் வைக்கும் மணிரத்னம் இந்த முறை தன் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டியிருக்கிறார். காரணப் பெயராக இருக்கக் கூடும் என நம்பிக்கை கொள்வோம்.
கமல்ஹாசனும் சிம்பு என செல்லமாக அழைக்கப்படும் சிலம்பரசனும் இணைந்து நடித்திருக்கும் படம் என்பதால் இன்னொரு கோணத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்.
இளம் வயது கமல்ஹாசனின் உயிரைக் காப்பாற்றும் சிறுவனான சிம்பு பின்னர் கமல்ஹாசனின் துணைத் தளபதியாக – இளைஞனாக – உயர்கிறார். ஒரு கட்டத்தில் சில சம்பவங்களால் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். கமலின் மனைவியாக திரிஷா நடித்திருக்கிறார். இருவருக்கிடையிலும் சில கிளுகிளுப்பான காட்சிகளும் முன்னோட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன.
எதிர்வரும் ஜூன் 5-ஆம் தேதி தக் லைஃப் திரைப்படம் உலகம் எங்கும் வெளியாகிறது. அந்தப் படத்தின் முன்னோட்டம் இன்று சனிக்கிழமை மே 17-ஆம் தேதி வெளியிடப்பட்டு பரபரப்பாக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. மே 16-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது ஒத்திவைக்கப்பட்டு மே 24-ஆம் தேதி பிரம்மாண்டமான அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
தக் லைஃப் படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் தளத்தில் காணலாம்: