Home உலகம் ஜோ லோ மீது அமெரிக்க அரசாங்கம் புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது

ஜோ லோ மீது அமெரிக்க அரசாங்கம் புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியது

564
0
SHARE
Ad

வாஷிங்டன் : தலைமறைவாக வாழும் வணிகர் ஜோ லோ மீது புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்க அரசாங்கத்தின் நீதித் துறை இலாகா மீண்டும் சுமத்தியுள்ளது.

கடந்த ஜூன் 10-ஆம் தேதி கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது.

2017ஆம் ஆண்டில் சட்டத்துக்கு புறம்பான வகையில் “பின்கதவு” வழியான தொடர்புகளை ஏற்படுத்தி, 1எம்டிபி மீதான வழக்குகளை நிறுத்தி வைக்க அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் நிருவாகத்திற்குள் தகாத நோக்கத்துடன் ஊடுருவல் செய்தார், சதியாலோசனை புரிந்தார் என இந்தப் புதிய குற்றச்சாட்டுகள் விவரிக்கின்றன.

#TamilSchoolmychoice

ஜோ லோவுடன் உடந்தையாக இருந்த குற்றத்திற்காக அமெரிக்க ராப் இசைப் பாடகர் (American rapper Prakazrel) பிரகாஸ்ரெல் மீதும் குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.

ஏற்கனவே, 2018-இல் 1எம்டிபிக்கு சொந்தமான பில்லியன் கணக்கான டாலர்களை கள்ளப் பரிமாற்றம் செய்வதற்கு சதியாலோசனை புரிந்த குற்றத்தை அமெரிக்காவில் ஜோ லோ எதிர்நோக்கி வருகிறார்.

விற்பனை செய்யப்பட்ட ஜோ லோவின் அமெரிக்க சொத்துகள்

இதற்கிடையில் 1எம்டிபி விவகாரத்தில் ஜோ லோவுக்குச் சொந்தமான சொகுசு அடுக்கக இல்லம் 7.6 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏற்கனவே அமெரிக்க அரசாங்கத்தால் விற்கப்பட்டிருக்கிறது. மலேசிய ரிங்கிட் மதிப்பில் இது 33 மில்லியன் ரிங்கிட்டாகும்.

இந்த இல்லம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்திருக்கிறது.

1எம்டிபி நிறுவனத்துக்குச் சொந்தமான பணத்தில் ஜோ லோ வாங்கிக் குவித்த சொத்துகள் தொடர்ந்து ஒவ்வொன்றாக மலேசியாவிலும், அமெரிக்காவிலும் விற்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவில் விற்கப்படும், ஜோ லோவுக்குச் சொந்தமான இரண்டாவது இல்லம் இதுவாகும்.

சில மாதங்களுக்கு முன்னர் ஜோ லோவுக்குச் சொந்தமான லாஸ் ஏஞ்சல்ஸ்  இல்லம் ஒன்று 18.5 மில்லியன் டாலர்களுக்கு விற்கப்பட்டது.

அவருக்குச் சொந்தமான உல்லாசப் படகு இக்குனாமிட்டி மலேசிய அரசாங்கத்தால் விற்கப்பட்டது. கெந்திங் நிறுவனம் அந்தப் படகை வாங்கியது.