கோலாலம்பூர் – 9-வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா, மலேசியக் கலைத்துறைக்கு பெருமை தரக்கூடியதாக அமைந்திருக்கிறது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை, சிறந்த குறும்படம், சிறந்த குறும்பட இயக்குநர் என கிட்டத்தட்ட 5 பிரிவுகளில் மலேசியப் படைப்புகள் விருதுகளைக் குவித்து மலேசியக் கலைத்துறைக்கும், கலைஞர்களுக்கும் பெருமை தேடித் தந்திருக்கின்றன.
சிறந்த திரைப்படமாக, கடந்த 2017-ம் ஆண்டு, அரங்கண்ணல் ராஜ் இயக்கத்தில், சிங்கை ஜெகன், கேஎஸ் மணியம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்து வெளிவந்த, ‘தோட்டம்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
சிறந்த இயக்குநராக, ‘சுகமாய் சுப்புலஷ்மி’ திரைப்படத்தை இயக்கிய கார்த்திக் ஷாமலன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
சிறந்த நடிகையாக, ‘சுகமாய் சுப்புலஷ்மி’ திரைப்படத்தில் நடித்த புனிதா ஷண்முகம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். சரேஸ் டி செவன், குபேன் மகாதேவன், பாக்கியா அறிவுக்கரவு, பிடி சரா உள்ளிட்டோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ‘சுகமாய் சுப்புலஷ்மி’ திரைப்படம் வரும் மே 17-ம் தேதி மலேசியத் திரையரங்குகளில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், சிறந்த குறும்படமாக, விக்னேஸ் லோகராஜ் அசோகன் இயக்கத்தில் புனிதா ஷண்முகம் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும், ‘திருவின் மங்கை’ தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. மிக விரைவில் இத்திரைப்படம் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த இயக்குநராக, ‘முதல் படையல்’ திரைப்படத்தை இயக்கிய மதன்குமரன் மாதவன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
தேர்வு செய்யப்பட்டிருக்கும் இத்திரைப்படங்கள் அனைத்தும் இந்த ஆண்டு சென்னையில் நடைபெறும் விழாவில் திரையிடப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் செல்லியல் சார்பில் வாழ்த்துகள்!
-ஃபீனிக்ஸ்தாசன்