புத்ரா ஜெயா – இணையத் தளங்களின் உள்ளடக்கங்களைக் கண்காணிக்கும் மலேசிய தொடர்பு மற்றும் பல்ஊடக ஆணையம் மலேசியா டுடே என்ற இணையத் தளத்தில் இடம் பெற்ற ரோபர்ட் குவோக் குறித்த சர்ச்சைக்குரிய 3 கட்டுரைகளை அகற்றுமாறு கட்டளையிட்டிருக்கிறது.
மலேசியா டுடே இணையத் தளத்தை நடத்தி வரும் ராஜா பெத்ரா கமாருடினுக்கு அந்த ஆணையம் இந்தக் கட்டளையைப் பிறப்பித்தது.
பல்ஊடக ஆணையம் அனுப்பிய அந்தக் கடிதத்தை மலேசியா டுடே தனது தளத்தில் வெளியிட்டது. தொடர்பு மற்றும் பல்ஊடகச் சட்டத்தின் பிரிவு 233-ஐ இந்தக் கட்டுரைகள் மீறியிருப்பதாகவும் ஆணையம் குறிப்பிட்டிருக்கிறது.
94 வயதான, மலேசியாவிலேயே மிகப் பெரிய கோடீஸ்வரரான ரோபர்ட் குவோக் எதிர்க்கட்சிகளை ஆதரிக்கும் இணைய ஊடகங்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் நிதி உதவி அளிக்கிறார் என அந்தக் கட்டுரைகளில் ராஜா பெத்ரா கமாருடின் குற்றம் சாட்டியிருக்கிறார்.
அதைத் தொடர்ந்து சுற்றுலா அமைச்சர் நஸ்ரி அசிஸ் ரோபர்ட் குவோக்கைக் கடுமையாகச் சாட – குவோக்கை ஆதரித்து மசீச, கெராக்கான் போன்ற கட்சிகள் குரல்கொடுக்க – அமைச்சரவையிலேயே மோதல்கள் நிகழ்ந்தன என ஊடகங்கள் தெரிவிக்க – கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் இவை தொடர்பான செய்திகள்தான் ஊடகங்களை ஆக்கிரமித்து வந்தன.
இந்தக் குற்றச்சாட்டுகளை குவோக்கும் ஜசெகவும் மறுத்துள்ளனர்.
மலேசியா டுடே இணையத் தளத்திற்கு எதிராக பல்ஊடக ஆணையம் நடவடிக்கை எடுப்பது இது முதன் முறையல்ல. நாட்டின் தலைமை வழக்கறிஞரின் (அட்டர்னி ஜெனரல்) மனைவி குறித்து அந்த இணையத் தளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரை ஒன்றை அகற்றுமாறு கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி பல்ஊடக ஆணையம் அந்த இணையத் தளத்திற்கு உத்தரவிட்டது.
தற்போது ரோபர்ட் குவோக் குறித்த கட்டுரைகளை மலேசியா டுடே அகற்றியுள்ளது.
பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் ரோபர்ட் குவோக்கிற்கு எதிரான கருத்துகளால் சீன வாக்குகள் தேசிய முன்னணிக்கு அறவே கிடைக்காது என்ற கருத்துகள் நிலவுவதால் அந்தக் கண்ணோட்டத்தைத் திருத்தும் வண்ணம் தேசிய முன்னணி அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.