சென்னை – டாஸ்மாக்குக்கு தான் ஆதரவு தெரிவித்ததாக ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறு என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது டுவிட்டரில் அவர் வெளியிட்டிருக்கும் தகவலில், “ஊடக நண்பரே! டாஸ்மாக்குக்கு (TASMAC) கமல் ஆதரவு என்ற செய்தி தவறு.திருத்திக்கொள்க.
இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாவீர்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
வார இதழ் ஒன்றில் கமல் எழுதி வரும் தொடரில், பூரண மதுவிலக்கு குறித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
“மதுவை உடனடியாக நிறுத்த உடம்பு கேட்காது. இது உடம்பு கேட்கும் வியாதி.ஒட்டுமொத்த சமுதாயத்தினையும் மதுவை விரும்பாதவர்கள் ஆக்க முடியாது. அப்படி அவர்களை மாற்றினால் கள்ளினால் வரும் கொடுமைகளை விட பல கொலைகள் நடக்கும்.குடிப்பதனை குறைக்கலாம்.ஆனால் ஒட்டுமொத்தம் ஆக நிறுத்த முடியுமா? என்பது சந்தேகம். பெண்களின் ஓட்டுகளை வாங்குவதற்காக பூரண மதுவிலக்கு என்று அடிக்கடி பூச்சாண்டி காட்டாதீர்கள்” என்று கமல் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.