கோலாலம்பூர் – இதயத் துடிப்பு குறைந்த காரணத்தால் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் இருதய அவசரச் சிகிச்சை (சிசியு) பிரிவில் அனுமதிக்கப்பட்ட பக்காத்தான் ஹரப்பான் எதிர்க்கட்சிக் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தனது உடல் நிலை சீரானதைத் தொடர்ந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறினார் என அவரைக் கண்காணித்த மருத்துவக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான டத்தோ டாக்டர் எஸ்.ஜெயேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
இன்று திங்கட்கிழமை மாலை 4.00 மணியளவில் அன்வார் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதாகவும், தொடர்ந்து அவர் செராசிலுள்ள தேசிய உடல் மறுசீரமைப்பு மையத்தில் தங்கி தனது சிகிச்சையைத் தொடர்வார் என்றும் டாக்டர் ஜெயேந்திரன் கூறியிருக்கிறார்.
தனது வலது தோள்பட்டையில் சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, அவருக்குத் தொடர்ந்து இருந்து வந்த வலியின் காரணமாக கடந்த சனிக்கிழமை மார்ச் 3-ஆம் தேதி வலது தோள்பட்டைப் பகுதியில் ஊசி மூலம் அன்வாருக்கு ஸ்டெரோய்ட் எனப்படும் ஊக்க மருந்து செலுத்தப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து அவருக்கு பாதிப்பு ஏற்பட்டதால் திங்கட்கிழமை அதிகாலை 1.00 மணியளவில் அவர் கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார் என பிகேஆர் கட்சியின் தொடர்புப் பிரிவின் இயக்குநர் பாஹ்மி பாட்சில் தெரிவித்திருக்கிறார்.
தற்போது சிறைவாசம் அனுபவித்து வரும் அன்வார் இப்ராகிம் எதிர்வரும் ஜூன் 8-ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.