கோலாலம்பூர் – சுற்றுலாத் துறையில் உள்நாட்டில் மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பிரபலமான பயணத் துறை வணிகர் டத்தோஸ்ரீ ஏ.பஹாருடின் தமிழகத்தின் தஞ்சாவூரில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயது முதல் சுற்றுலாத் துறை வழிகாட்டியாக வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் சொந்தத்தில் பயண நிறுவனம் தொடங்கி, விமானப் பயணச் சீட்டுகளுக்கான முகவராகவும் உயர்ந்த பஹாருடின் உலகம் முழுவதும் சுற்றுலாக்களை நடத்தி மலேசியர்களைப் பெரிதும் கவர்ந்தவர்.
அது மட்டுமின்றி, நள்ளிரவு தோறும், மின்னல் வானொலியில் தனது கம்பீரமான, நகைச்சுவை ததும்பும் ஏற்ற இறக்கக் குரலோடு தனது சுற்றுலாப் பயணங்கள் குறித்து விரிவாக விளக்கி அந்த விளம்பர நிகழ்ச்சியின் மூலமே பலருக்கும் அறிமுகமானவர் பஹாருடின்.
உள்நாட்டில் மட்டுமின்றி தமிழகத்திலும், பல வெளிநாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் கூட சுற்றுலாவுக்கான விருதுகளைக் குவித்தவர் பஹாருடின்.
ஏ.பஹாருடின் டிராவல் அண்ட் டுவர்ஸ் என்ற பெயரில் தனது சொந்த சுற்றுலா நிறுவனத்தை அவர் தலைநகர் மஸ்ஜிட் இந்தியாவில் நடத்தி வந்தார்.
அவரது மறைவு மலேசியச் சுற்றுலாத் துறைக்கு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.