கோத்தா கினபாலு – சபா மாநிலம் ரானாவ் வட்டாரத்தில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட 5.02 ரிக்டர் நிலநடுக்கம் காரணமாக, மவுண்ட் கினபாலுவில் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த சுமார் 239 பேர் இறங்க வழியின்றி சிக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் அவர்களை மீட்புக் குழுவினர் பாதுகாப்பாக மீட்டு தரைக்குக் கொண்டு வந்தனர்.
ரானாவ் மற்றும் கோத்தா மருடு பகுதிகளுக்கு இடையில் வடக்கேயுள்ள 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மலைப்பகுதியில், 5 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியிருக்கிறது.
இந்த நிலநடுக்கம் மவுண்ட் கினபாலு மலையில் மேற்கு முகத்தில், கோத்தா பெலுட், தம்பாருலி, கியுலு பகுதிகளிலும், பெனம்பாங், பாபார் ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
எனினும், இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லையென்று தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் தெரிவித்திருக்கின்றனர்.