Home நாடு புங்க் மொக்தார் – அவரின் மனைவி, ஊழல் வழக்கில் எதிர்வழக்காட மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

புங்க் மொக்தார் – அவரின் மனைவி, ஊழல் வழக்கில் எதிர்வழக்காட மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு

148
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சபா மாநிலத்தின் சர்ச்சைக்குரிய முக்கிய அரசியல்வாதியான டத்தோஸ்ரீ புங்க் மொக்தார் ராடின், அவரின் மனைவி டத்தின்ஸ்ரீ சிசி இசட் அப்துல் சமாட் ஆகிய இருவர் மீதான ஊழல் வழக்கு மீண்டும் தொடர்கிறது.

பெல்க்ரா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தபோது 2.8 மில்லியன் ரிங்கிட் தொடர்பில் ஊழல் புரிந்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கோலாலம்பூர் அமர்வு (செஷன்ஸ்) நீதிமன்றத்தில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அரசாங்கத் தரப்பு நிரூபித்துள்ளதாகக் கூறி நீதிபதி அவர்களை எதிர்வழக்காட 2 செப்டம்பர் 2022-இல் உத்தரவிட்டிருந்தார்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் புங்க் மொக்தாரும் அவரின் மனைவியும் மேல்முறையீடு செய்தனர். உயர்நீதிமன்றம் அமர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்து அவர்கள் எதிர்வழக்காடத் தேவையில்லை எனக் கூறி அவர்களை விடுதலை செய்தது.

#TamilSchoolmychoice

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அரசாங்கத் தரப்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், இன்று திங்கட்கிழமை (நவம்பர் 18) தனது தீர்ப்பை வழங்கியது.

மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வின் ஏகமனதான அந்தத் தீர்ப்பின்படி, எதிர்வழக்காட நீதிமன்றம் விடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் புங்க் மொக்தாரும் அவரின் மனைவியும் தங்களின் எதிர்வாதங்களைச் சமர்ப்பிக்க வேண்டுமெனவும் மேல்முறையீட்டு நீதின்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து இனி புங்க் மொக்தார் மீதான வழக்கு அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்படும். எதிர்வரும் டிசம்பர் 5-ஆம் தேதி வழக்கு மீதான விசாரணை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட வேண்டும் எனவும் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.