Home நாடு பெர்சாத்து வழக்கு: 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்படுமா?

பெர்சாத்து வழக்கு: 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தப்படுமா?

190
0
SHARE
Ad
தான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் – நாடாளுமன்ற அவைத் தலைவர்

பெர்சாத்து கட்சியின் 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்களின் நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானதாக – கட்சித் தாவல் சட்டத்தின்படி – தான் அறிவிக்க வேண்டுமென பெர்சாத்து கட்சி கோரிக்கை விடுத்திருந்தது.

எனினும் நாடாளுமன்ற அவைத் தலைவர் தான்ஸ்ரீ ஜோஹாரி அப்துல் அந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. அந்த 5 நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களின் பதவிகளில் தொடரலாம் என முடிவெடுத்தார்.

அந்த முடிவுக்கு எதிராக, பெர்சாத்து கட்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. நாடாளுமன்ற அவைத் தலைவர் ஜோஹாரியையும் சம்பந்தப்பட்ட 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பிரதிவாதிகளாக நவம்பர் 15-இல் தொடுக்கப்பட்ட அந்த வழக்கில் பெர்சாத்து பெயர் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சர்ச்சைக்குரிய 5 பெர்சாத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுல்காப்பெரி ஹானாபி (தஞ்சோங் காராங்), சைட் அபு ஹூசின் ஹாபிஸ் சைட் அப்துல் ஃபாசால் (புக்கிட் கந்தாங்), இஸ்கண்டார் சுல்கர்னைன் அப்துல் காலிட் (கோலகங்சார்), முகமட் அசிசி அபு நைம் (குவா மூசாங்), சாஹாரி கெச்சிக் (ஜெலி) ஆகியோராவர்.

பெர்சாத்து கட்சி இந்த வழக்கில் வெற்றி பெற்றால், சம்பந்தப்பட்ட அந்த 5 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத் தேர்தல்கள் நடத்தப்படும்.