Home நாடு சிவகுமார் : “பொதுச் சேவைத் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு”

சிவகுமார் : “பொதுச் சேவைத் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு”

67
0
SHARE
Ad
வ.சிவகுமார்

(சிவா லெனின்)

கோலாலம்பூர்: நாட்டின் வளர்ச்சியை உறுதி செய்யவும் அனைத்து தரப்பு மக்களுக்கும் நியாயமான,சரிநிகரான வாய்ப்புகளை பொது சேவைத்துறையில் வழங்குவதில் தீவிர முனைப்பு காட்டும் மடானி அரசாங்கம் அத்துறையில் மாற்றுத்திறனாளிகளும் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதோடு அவர்களின் ஆற்றலுக்கு உட்பட்ட துறை சார்ந்த பணிகளை வழங்குவதிலும் அரசு தீவிரம் காட்டுவதாகவும் பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் பொது சேவைத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மற்றும் அரசாங்கத்தின் ஆக்கப்பூர்வ நடவடிக்கை ஆகியவை குறித்து கேள்வி எழுப்பிய பின்னர் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிவகுமார் இதனை விவரித்தார்.

#TamilSchoolmychoice

மேலும்,தன்னை பொருத்தமட்டில் மடானி அரசாங்கம் அனைவருக்கும் சமமான வாய்ப்பையும் சக்திக்கு உட்பட்ட ஆற்றல் மிகு வாய்ப்புகளையும் வழங்குகிறது.மாற்றுத்திறனாளிகளையும் இருக்கும் வாய்ப்புகளில் விடுப்படாமல் அவர்களுக்குரிய வாய்ப்புகளில் அவர்கள் தொடர்ந்து ஆக்கப்பூர்வமாகவும் வெற்றிகரமாகவும் இலக்கை நோக்கி பயணிக்க அரசு எல்லா விதத்திலும் நிறைவான சேவையையும் நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக கூறினார்.

தனது மக்களவை கேள்விக்கு பதிலளித்த பிரதமர் துறை துணை அமைச்சர் (கூட்டரசு பிரதேசம்) டாக்டர் ஷாலிஹா முஸ்தப்பாவின் கூற்றுப்படி புள்ளியல் விபரத்தின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டை காட்டிலும் 2024ஆம் ஆண்டில் பொது சேவைத்துறையில் வேலைக்கு அமர்த்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது அரசாங்கத்தின் பரிவு மற்றும் அக்கறையை வெளிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2023ஆம் ஆண்டில் சுமார் 92 மாற்றுத்திறனாளிகள் பொது சேவைத்துறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.அவர்களில் 74 பேர் உடல்சார்ந்தும், ஒன்பது பேர் பார்க்கும் திறன்குறைவு பிரிவை சார்ந்தும் ஐந்து பேர் கேட்கும் திறன் பிரிவை சார்ந்தும் இருந்த வேளையில் இதர பிரிவில் இருவரும் பேச்சு மற்றும் மன சார்ந்த பிரிவுகளில் தலா ஒருவரும் பொது சேவைத்துறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் இதுவரை 44 மாற்றுத்திறனாளிகளுக்கு பொது சேவைத்துறையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் பகிர்ந்து கொண்ட சிவகுமார் இந்த எண்ணிக்கை கடந்தாண்டை காட்டிலும் குறைவாக தெரிந்தாலும் அக்டோபர் முதல் டிசம்பர் 2024 வரையிலான புள்ளியல் விவரம் சேர்க்கப்படுமானால் கடந்தாண்டை காட்டிலும் இவ்வாண்டு பொது சேவைத்துறையில் சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை மிக கூடுதலாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

மேலும்,மடானி அரசாங்கத்தின் பொது சேவைத்துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான 1 விழுகாடு வாய்ப்பு என்பது குறைந்தபட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு துறையில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளை தொடர்ந்து உறுதி செய்வதோடு அது வெறும் கோட்டாவை நிறப்பும் ஒன்றாக இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் மாற்றுத்திறனாளிகளின் பெரும் பங்களிப்பாகவே அமைந்திருப்பதாகவும் நினைவுறுத்தினார்.

அரசாங்கத்தின் இந்த முயற்சியும் செயல்பாடும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைவான வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதோடு அரசு துறையில் அவர்களின் நிலையான இடத்தையும் அது உறுதி செய்கிறது.அதேவேளையில்,ஆற்றலுக்கு உட்பட்ட வாய்ப்பு என்னும் நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் ஆற்றல்,ஆளுமை மற்றும் திறனுக்கு உட்பட்டு வாய்ப்புகளை வழங்கிடும் நிலையில் அவர்களின் திறனை கண்டறிந்து பொது சேவைத் துறையில் வாய்ப்புகளை விரிவாக்கம் செய்ய அரசு தீவிர முனைப்பும் காட்ட வேண்டும் என்றார்.

அதேவேளையில்,மாற்றுத்திறனாளிகளின் ஆற்றல் மற்றும் பங்களிப்பு ஆகியவை குறித்த விழிப்புணர்வையும் தெளிவையும் முதலாளிகள் உணர்ந்திருக்கும் வகையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகிறது.இது அரசு மற்றும் தனியார் துறை முதலாளிகளுக்கு உகர்ந்த ஒன்றாகவும் அவசியமானதாகவும் இருப்பதாக சுட்டிக்காண்பித்தார்.நாட்டின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பும் சேவையும் காலத்திற்கு உகர்ந்தது என்பதை அனைத்து முதலாளிகளும் உணர்ந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படுத்தப்படும் வாய்ப்பும் முதன்மையும் அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரம்,சமூகவியல் தாண்டி நாடின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பெரும் துணையாகவும் ஆளுமை மிக்க சக்தியாகவும் உருமாறும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.