கோத்தா கினபாலு : சபா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான மூசா அமான் சபா மாநில ஆளுநராக (கவர்னர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே, ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியவர் மூசா அமான். அந்தக் குற்றச்சாட்டுகள் பின்னர் மீட்டுக் கொள்ளப்பட்டன.
மூசா அமான் நியமனம் குறித்து மூடா கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தக் கண்டனத்திற்கு பதில் தெரிவித்துள்ளார் அரசாங்கத்துக்கான பேச்சாளர் அமைச்சர் பாமி பாட்சில். சபா ஆளுநர் என்பது மாநில முதலமைச்சரின் பரிந்துரையின் அடிப்படையில் மாமன்னர் மேற்கொள்ளும் முடிவு என பாமி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனவரி 1 முதல் மூசா அமானின் ஆளுநர் நியமனம் அமுலுக்கு வருகிறது. அடுத்த 4 ஆண்டுகளுக்கு அவர் இந்தப் பதவியை வகிப்பார்.
தனது நியமனம் குறித்து மூசா அமான் மாமன்னருக்கும், சபா முதலமைச்சருக்கும், பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கும் நன்றி தெரிவித்தார். சபா ஆளுநராக மூசா அமான் நியமிக்கப்படும் கடிதத்தை அவர் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) மாமன்னரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
ஆளுநர்களுக்கே உரிய ‘துன்’ என விருதும் அவருக்கு இன்று வழங்கப்பட்டது.