கோலாலம்பூர்: ஆசிய குவாக்கரெல்லி– சைமண்ட்ஸ் (கியூஎஸ்) பல்கலைக்கழக தரவரிசையில், மலாயா பல்கலைக்கழகம் கடந்த ஆண்டை விட ஆறு இடங்கள் உயர்ந்து இவ்வாண்டு 13-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மலாயா பல்கலைக்கழகம் தொடர்ச்சியாக ஒன்பதாவது ஆண்டாக மேல்நோக்கி உயர்ந்துள்ளது. 2009-ஆம் ஆண்டில் தரவரிசை தொடங்கப்பட்டதிலிருந்து, இப்பல்கலைக்கழகம் அதன் தரவரிசையை 26 இடங்களுக்கு மேம்படுத்த முடிந்துள்ளது.
“கூடுதலாக, மலாயா பல்கலைக்கழகம் ஆறு குறிகாட்டிகளின் கீழ், அதாவது கல்வி நற்பெயர், நிர்வாக நற்பெயர், மாணவர் முதல் ஆசிரிய விகிதம், அனைத்துலக ஆராய்ச்சி தொடர்பு மற்றும் மாணவர்கள் பரிமாற்ற விவகாரத்தில் நாட்டில் முதலிடத்தில் உள்ளது” என்று அப்பல்கலைக்கழகம் அறிக்கை ஒன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.
இந்த முடிவானது மகிழ்ச்சிகரமானது என்றும், பல்கலைக்கழகம் இன்னும் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் நிறைய உள்ளதாக பல்கலைக்கழக துணை வேந்தர் டத்தோ அப்துல் ராகிம் ஹஷிம் கூறினார்.