ஜோர்ஜ் டவுன்: பிரதமரை தொடர்ந்து பதவி விலகக் கோருவதாகக் கூறி பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி உட்பட பிகேஆர் தலைவர்களையும் விமர்சித்த சைட் சாதிக் அப்துல் ரஹ்மானை, இராமசாமி விமர்சித்துள்ளார்.
ஒளிந்துக் கொள்ளாமல், நம்பிக்கைக் கூட்டணி இளைஞர் தலைவர் இடைவெளியை நெருக்கமாக்க முன்வர வேண்டும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
நாட்டின் தலைமையை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைக்கும் ஒப்பந்தத்தை மதிக்குமாறு பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்டிடம் கேட்கும் அவர்களின் ஜனநாயக உரிமையை கேள்விக்குட்படுத்தக்கூடாது என்றும் அவர் நினைவூட்டினார்.
“மகாதீரை ஒரே நேரத்தில் பதவி விலக யாரும் கட்டாயப்படுத்தவில்லை, ஆனால், அவர் பதவியை ஒப்படைக்கும் தேதியை நிர்ணயிக்க வேண்டும்” என்று இராமசாமி நேற்றிரவு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் நம்பிக்கைக் கூட்டணி ஒப்பந்தந்தின்படி டாக்டர் மகாதீர் இடைக்கால பிரதமராக இரண்டு ஆண்டுகள் இருக்க வேண்டும் என்பதாகும் என்று அவர் குறிப்பிட்டார்.
“துரதிர்ஷ்டவசமாக, இன்றுவரை, நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு பிரதமர் அதிகாரத்தை மாற்றுவதற்கான தேதியை நிர்ணயிக்கவில்லை. இப்போது யார் தவறு?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நவம்பர் மாதம் கோலாலம்பூரில் நடக்க இருக்கும் ஆசிய–பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (அபெக்) நாடுகளின் உச்சமாநாட்டிற்குப் பிறகு மகாதீர் பதவி விலகுவதாகக் கூறிய போதிலும், ஒரு தேதி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று இராமசாமி கூறினார்.
“பதவி பரிமாற்றத்திற்கான தேதியை நிர்ணயிப்பதில் என்ன தவறு?”
“மகாதீருக்கு இதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று நான் நம்புகிறேன். ஆனால், சைட் சாதிக் மகாதீரின் கவனத்தை ஈர்க்க முயற்சிப்பதாக தெரிகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
தலைமைத் தேதியை மாற்றுவதற்கான அழைப்பு உறுதியற்ற தன்மையை உருவாக்கலாம் அல்லது மகாதீரின் ஆட்சித் திறனைத் தடுக்கும் என்று சைட் சாதிக்கின் கூற்றையும் இராமசாமி ஏற்கவில்லை.
“சைட் சாதிக் ஜனநாயகத்தை நம்பினால், அவர் வேறுபடுவதற்கான உரிமையை மதிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அன்வார் தொடங்கிய சீர்திருத்த இயக்கம் இல்லாமல் நம்பிக்கைக் கூட்டணி கடந்த பொதுத் தேர்தலில் வென்றிருக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
“சீர்திருத்த சகாப்தத்தின் அரசியல் இயக்கவியலைப் புரிந்துகொள்வதற்கும் பாராட்டுவதற்கும், சைட் சாதிக் புதியவர் என்று நான் நினைக்கிறேன்.”
“தேசிய முன்னணியை எதிர்கொள்ள அன்வார் இல்லாத நிலையில், மகாதீர் முக்கியமான தலைமைத்துவத்தை வழங்கினார். மகாதீருக்கு ஆதரவாக மாற்றத்தை மலேசியர்கள் விரும்பினார்கள்.”
“ஐந்து இடைத்தேர்தல்களில் தோல்வியடைந்த பின்னர், மாற்றத்தைத் தீர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் குழு இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்” என்று இராமசாமி கூறினார்.