Home One Line P2 கொரொனாவால் 2 மாதங்களில் 19 பில்லியன் டாலர்கள் மதிப்பிழந்த முகேஷ் அம்பானி

கொரொனாவால் 2 மாதங்களில் 19 பில்லியன் டாலர்கள் மதிப்பிழந்த முகேஷ் அம்பானி

732
0
SHARE
Ad

மும்பை – கொவிட்-19 பாதிப்புகளால், நாடும் மக்களும் அன்றி பெரும் பணக்காரர்களும் பல வழிகளிலும் இழப்புகளை எதிர்நோக்கி வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவில் முதலாவது பணக்காரரான முகேஷ் அம்பானி கடந்த இரண்டு மாதங்களில் தனது சொத்து மதிப்பில் சுமார் 19 பில்லியன் அமெரிக்க டாலர்களை இழந்திருக்கிறார்.

தற்போது அவரது சொத்து மதிப்பு மார்ச் 31-ஆம் தேதியோடு 48 பில்லியன் டாலர்களாகக் குறைந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

இன்னொரு விதத்தில் கணக்கிட்டால் நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் டாலர்கள் வீதம் இரண்டு மாதங்களில் முகேஷ் அம்பானி இழந்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவரும் தலைமை இயக்குநருமான அவர் உலகின் 9-வது பணக்காரர் இடத்திலிருந்து தற்போது 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என வணிக ஊடகங்களின் ஆய்வுகள் காட்டுகின்றன.

இந்தியாவின் மற்ற சில பணக்காரர்களின் மதிப்பும் கிடுகிடுவென வீழ்ச்சியடைந்திருக்கின்றன.

பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் கவுதம் அடானி தனது மதிப்பில் 6 பில்லியன் டாலர்களை இழந்திருக்கும் நிலையில், தமிழ் நாட்டைச் சேர்ந்த ஷிவ் நாடார் (எச்.சி.எல் டெக்னோலோஜிஸ்) தனது மதிப்பில் 5 பில்லியன் டாலர்களை இழந்திருக்கிறார்.

இந்த வீழ்ச்சிகளைத் தொடர்ந்து உலகின் முதல் 100 பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி மட்டுமே நிலைத்திருக்கிறார். மற்ற இந்தியர்கள் யாரும் இடம் பெற்றிருக்கவில்லை.

கொவிட்-19 பாதிப்புகள், அதைத் தொடர்ந்த பங்குச் சந்தைகள் வீழ்ச்சி, இந்திய ரூபாய் மதிப்பிழப்பு என அனைத்தும் ஒன்றன்பின் ஒன்றாக ஏற்படுத்திய தாக்கங்களால் இந்தியப் பணக்காரர்கள் தங்களின் சொத்துகளில் பெரும் மதிப்பிழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

கொவிட்-19 பாதிப்புகளால் உலகப் பணக்காரர்கள் பலரும் தங்களின் சொத்துகளின் மதிப்பை இழந்திருக்கின்றனர்.

வாரன் பஃபட் 19 பில்லியன் டாலர்கள் மதிப்பிழப்போடு அவரது சொத்தின் மதிப்பு தற்போது 83 பில்லியன் டாலர்களாக இரண்டே மாதத்தில் குறைந்திருக்கிறது.

இந்த மாற்றங்களுக்கிடையில் அமேசோன் நிறுவனத்தின் ஜெப் பெசோஸ் தொடர்ந்து உலகின் முதலாவது பணக்காரராகத் தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார். 131 பில்லியன் டாலர்களை சொத்து மதிப்பாகக் கொண்ட இவர் தனது சொத்து மதிப்பில் 9 விழுக்காட்டை மட்டுமே இழந்துள்ளார்.

இரண்டாவது நிலை உலகப் பணக்காரராக 91 பில்லியன் டாலர்களோடு பில் கேட்ஸ் தொடர்ந்து தனது நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

அடுத்த நிலைகளில் வாரன் பஃபட், பிரான்சின் அர்னால்ட் ஆகியோர் வருகின்றனர்.

மெக்சிகோவின் கார்லோஸ் சிலிம், பேஸ்புக் நிறுவனத்தின் மார்க் சக்கர்பெர்க், கூகுள் நிறுவனத்தின் லேரி பேஜ், செர்ஜி பிரின் மற்றும் மைக்கல் புளும்பெர்க் ஆகியோரும் தங்களின் சொத்து மதிப்பில் கணிசமான விழுக்காட்டை இழந்திருக்கின்றனர்.