கோலாலம்பூர்: பிரதமர் மொகிதின் யாசின் இன்று வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு தொலைக்காட்சியில் சிறப்பு நேரடி ஒளிபரப்பில் உரையாற்ற உள்ளார்.
இருப்பினும், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நீட்டிக்கப்படுமா அல்லது அதற்கு நேர்மாறாக அவர் அறிவிப்பாரா என்பது தெளிவாக இல்லை.
மார்ச் 18 அன்று தொடங்கிய நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை, மூன்று கட்டங்களைக் கடந்து ஏப்ரல் 28-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
அதிக எண்ணிக்கையிலான கொவிட் -19 சம்பவங்களைப் பதிவுசெய்த பின்னர் சில பகுதிகள் நடமாட்டக் கட்டுப்பாட்டின் கீழ் இறுக்கமான கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டன.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களில் உள்ளது. நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நீட்டிக்கப்படுமா அல்லது விலக்கப்படுமா என்பது சுகாதார அமைச்சின் ஆலோசனையின் பேரில் முடிவு செய்யப்படும்.