Home One Line P1 “புத்தர் பெருமான் கற்பித்த மனித நேயத்தைக் கடைப்பிடிப்போம்” – விக்னேஸ்வரனின் விசாக தின வாழ்த்து

“புத்தர் பெருமான் கற்பித்த மனித நேயத்தைக் கடைப்பிடிப்போம்” – விக்னேஸ்வரனின் விசாக தின வாழ்த்து

907
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாளை வியாழக்கிழமை (மே 7) கொண்டாடப்படும் விசாக தினத்தை முன்னிட்டு மஇகா தேசியத் தலைவரும் நாடாளுமன்ற மேலவைத் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

“இந்த உலக மக்கள் அனைவரும் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அரச வாழ்க்கையில் இருந்து விடுபட்டு துறவம் பூண்ட புத்தர் பெருமான் விட்டுச் சென்ற மனிதநேயத்தை தொடர்ந்து கடைப்பிடிப்போம்” என்று விக்னேஸ்வரன் தனது விசாக தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

“புத்தர் பெருமான் மிகவும் சாந்தமானவர். அரச குடும்பத்தில் வாழ்ந்தவர். அரண்மனையை விட்டு வெளியே வராதவர். கஷ்டம் தெரியாதவர். இந்த நிலையில் ஒரு நாள் அரண்மனையை விட்டு வெளியே வந்த போதுதான் மக்கள்படும் துன்பங்களை, துயரங்களைப் பார்த்து போதி மரத்தடியில் அமர்ந்து துறவறம் பூண்டார். மக்கள் மனதில் மனிதநேயத்தை பதித்துச் சென்ற புத்தர் பெருமானின் மனிதநேயத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் தனது செய்தியில் கேட்டுக் கொண்டார்.

#TamilSchoolmychoice

புத்தரின் நடவடிக்கைகள் எல்லாம் மக்கள் நலனுக்காகவே மேற்கொள்ளப்பட்டது என்பதால் இந்த கொரோனா தொற்றுக் கிருமி காலகட்டத்தில் புத்தர் பெருமான் போல் அனைவரும் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையை எப்போதும் கொண்டிருக்க வேண்டும் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

“இந்த கோவிட் 19 காலகட்டத்தில் நாம் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கொரோனா தொற்றுக் கிருமியை முற்றாக ஒழிக்க அனைவரது பங்கும் மிகவும் முக்கியம். இந்த காலகட்டத்தில் நாம் அனைவரும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் வழங்கும் அதேவேளையில் புத்தர் பெருமான் போல் மக்களுக்கு உதவியும் வழங்கலாம். இந்த இறுக்கமான காலகட்டத்தில் வசதி படைத்தவர்கள் இல்லாதவர்களுக்கு வழங்க வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

“நாடும் நாட்டு மக்களும் இந்த கோவிட் 19 நோய்த் தொற்று பரவல் காரணமாக பல்வேறு சவால்களை எதிர்நோக்கி வருகிறார்கள். இதில் ஏழை மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிக்கின்றனர். இத்தகைய சவால்களை சமாளிக்க ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொள்வது அவசியமாகும். இதில் குறிப்பாக வசதி படைத்தவர்கள் இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்ற மனப்பான்மையை கொண்டிருக்க வேண்டும்” என்றும் விக்னேஸ்வரன் தனது செய்தியில் குறிப்பிட்டார்.

புத்தர் பெருமானின் கொள்கைகள் எல்லாமே மக்களுக்கு இன்றைக்கும் தேவையான ஒன்றாகவே இருப்பதால் அனைவரும் அதனை தாராளமாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட விக்னேஸ்வரன், புத்த மதத்தைச் சார்ந்த மக்கள் அனைவருக்கும் தமது விசாக தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.