கோலாலம்பூர்: தாம் கட்சியிலிருந்து நீக்கப்படுவதற்கு தயாராக இருப்பதாகவும், ஆனால் அது கட்சி அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும் என்றும் துன் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்தார்.
மேலும், தாம் கட்சியின் உச்சமன்றக் கூட்டத்திற்கு அழைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய காணொளியில், பெர்சாத்து தலைவரும் முன்னாள் பிரதமருமான அவர் கூறுகையில், அண்மையில் தனது கட்சியிலிருந்து, அவரை நீக்குவதற்கான முயற்சியில் கட்சி அரசியலமைப்பை கடுமையாக மீறியுள்ளதாகக் கூறினார்.
தன்னையும் பெர்சாத்து துணைத் தலைவராக இருக்கும் அவரது மகன் முக்ரிஸ் மகாதீரையும் அழைக்காமல் உச்சமன்றக் கூட்டம் அழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
“நான் வெளியேற தயாராக இருக்கிறேன். ஆனால், அது கட்சி அரசியலமைப்பைப் பின்பற்ற வேண்டும். என்னை அழைக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.
கட்சி அரசியலமைப்பின் படி, உடல்நிலை சரியில்லாமல் அல்லது வெளிநாட்டில் இல்லாவிட்டால் தலைவர் மட்டுமே உச்சமன்றக் கூட்டத்தை அழைக்க முடியும் என்று பெர்சாத்து தலைவர் டான்ஸ்ரீ மொகிதின் யாசினுக்கு அவர் நினைவுபடுத்தினார்.
தலைவர் மற்றும் துணைத் தலைவர் தவிர அனைத்து அலுவலர்களுக்கும் அண்மையில் அனுப்பப்பட்ட உச்சமன்ற சந்திப்புக் கூட்ட அறிவிப்புக்கு பதிலளிக்கும் விதமாக டாக்டர் மகாதீர் இதனைத் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மே 11-ஆம் தேதி திட்டமிடப்பட்ட அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.