புதுடில்லி – இந்தியாவின் பல பகுதிகள் இன்னும் கொவிட்-19 பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் வங்காளக் கடலில் மையமிட்ட சக்தி வாய்ந்த புயல் ஒன்று ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களின் கடற்கரைப் பகுதிகளைத் தாக்கியது.
அம்பான் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் தற்புத வங்காளதேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அங்கும் பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயலின் தாக்கத்தால் மேற்கு வங்காளத்தில் இதுவரையில் இருவர் உயிரிழந்துள்ளனர். ஓர் இளம்பெண் கடுமையான காயங்களுக்கு இலக்காகியுள்ளார்.
மரணமடைந்த ஒரு மரம் ஒன்று சாய்ந்து விழுந்ததால் மரணமடைந்தார். மற்றொருவர் அவுரா என்ற இடத்தில் தகரக் கூரை விழுந்ததில் மரணமடைந்தார்.
ஒடிசா மாநிலத்தின் கடற்கரைப் பகுதிகளையும் அம்பான் தாக்கியிருக்கிறது. அங்கும் இருவர் மரணமடைந்துள்ளனர்.
கனத்த மழையுடன் கூடிய அம்பான் புயல் காற்றினால் பல மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டு தூக்கியெறியப்பட்டன. தொலைத்தொடர்பு கம்பங்களும் மின்சாரக் கம்பங்களும் கடுமையாக சேதமுற்று சரிந்து விழுந்திருக்கின்றன.
வங்காள தேசத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் அம்பான் புயல் அந்நாட்டில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருக்கும் மியன்மார் நாட்டின் ரோஹிங்கியா அகதிகள் முகாம்களில் பலத்த சேதங்களை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, கொவிட்-19 தொற்று பரவுதலால் இந்த முகாம்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் புயல் காற்றினால் ஏற்படப் போகும் சேதங்களைச் சமாளிப்பது பெரும் சவாலாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது.