புதுடில்லி : கொவிட்-19 தொற்றுக்கு எதிராக இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் தடுப்பு மருந்துக்கான ஆய்வு மையங்கள் அமைந்துள்ள 3 வெவ்வேறு நகர்களுக்கு இந்தியப் பிரதமர் இன்று ஒரே நாளில் விமானம் மூலம் நேரடி சூறாவளிப் பயணம் மேற்கொண்டார்.
முதல் கட்டமாக குஜராத் மாநிலத்தின் அகமதபாத் நகரில் அமைந்துள்ள சைடஸ் உயிரியல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு (Zydus Biotech Park in Ahmedabad) வருகை தந்த மோடிக்கு அங்கு நடத்தப்பட்டு வரும் பரிசோதனைகள் குறித்து அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
அவர்களின் பணிக்குப் பாராட்டு தெரிவித்த மோடி இந்திய அரசாங்கம் அந்த மையத்துக்கு தொடர்ந்து தீவிர ஆதரவை வழங்கி வரும் எனக் கூறினார்.
அதனை அடுத்து ஹைதராபாத் நகரில் அமைந்துள்ள பாரத் உயிரியல் தொழில்நுட்பப் பூங்காவுக்கு (Bharat Biotech facility in Hyderabad) மோடி வருகை தந்தார். அந்த மையத்தில் உருவாக்கப்பட்டு வரும் கொவிட்-19 தடுப்பு மருந்து குறித்த விளக்கங்களைப் பெற்றார்.
அதனை அடுத்து மோடியின் அடுத்த வருகை மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்திருக்கும் பூனா நகரை நோக்கியதாக இருக்கும். இன்று மாலை பூனா வந்தடையும் மோடி அங்குள்ள செரும் இன்ஸ்டிடியூட் இந்தியா (Serum Institute of India) ஆய்வு மையத்துக்கு வருகை தருவார். இங்கும் கொவிட்-19 தடுப்பு மருந்து பல்வேறு பரிசோதனைக் கட்டங்களில் தயாரிப்பு நிலையில் இருந்து வருகிறது.
மூன்று நகர்களுக்குமான வருகையை முடித்துக் கொண்டு மோடி இன்று மாலையே புதுடில்லி திரும்புவார்.