கோலாலம்பூர் – கிறிஸ்துமஸ் பெருநாளை முன்னிட்டு ‘அன்பென்ற மழையிலே’ எனும் உள்ளூர் கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சி ஆஸ்ட்ரோவில் முதல் ஒளிபரப்பு காணுகிறது.
நாளை வெள்ளிக்கிழமை டிசம்பர் 25, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201)-இல் தொலைக்காட்சியிலும், ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மூலமாகவும் முதல் ஒளிபரப்பு காணும் “அன்பென்ற மழையிலே” எனும் உள்ளூர் தமிழ் இசை நிகழ்ச்சியோடு இவ்வாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கொண்டாடலாம். இந்த இசை நிகழ்ச்சி, திறமையான உள்ளூர் கலைஞர்களைத் தாங்கி மலர்கின்றது.
மோஜோ ப்ராஜெக்ஸ் சென்டிரியான் பெர்ஹாடிலிருந்து (Mojo Projects Sdn Bhd) இரத்தின குமார் நடராஜன் தயாரித்த இந்த இசை நிகழ்ச்சியை, குமரன் இராமசாமி இயக்கியுள்ளார். இந்த ஒன்றரை மணி நேர சிறப்பு இசை நிகழ்ச்சியில் டத்தின் ஸ்ரீ மணிமாலா, எம்.எஸ். ப்ரீட்டோ, பிரீத்தா பிரசாத், ஆனந்தா ராஜாராம், காயத்ரி தண்டபாணி மற்றும் அமோஸ் பால் என ஆறு உள்ளூர் பாடகர்கள், தனி, டூயட் மற்றும் குழு என வெவ்வேறு வகைப் படைப்புகளில் பாடி அசத்தவுள்ளனர். பிரபலமான கிறிஸ்துமஸ் பாடல்கள் மற்றும் திரைப்படங்களில் இடம்பெற்ற புகழ்பெற்றப் பாடல்களை இவர்கள் பாடியுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு மேலும் அழகூட்டும் வகையில் உள்ளூர் இசை இயக்குநர் லாரன்ஸ் சூசை தலைமையிலான நேரலை இசைக்குழுவினர் (live band) பலதரப்பட்ட இசைக்கருவிகளை வாசித்துச் சிறப்பித்துள்ளனர்.
இரத்தின குமார் நடராஜன், மோஜோ ப்ராஜெக்ஸ் சென்டிரியான் பெர்ஹாடின் (Mojo Projects Sdn Bhd) தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் தயாரிப்பாளர், கூறுகையில், “அண்மையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்பு கண்ட, ரெட்ரோ இசை நிகழ்ச்சியான மலரும் புன்னகையின் வெற்றியைத் தொடர்ந்து, அன்பென்ற மழையிலே எனும் கிறிஸ்துமஸ் சிறப்பு இசை நிகழ்ச்சியை வழங்குவதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம். உள்ளூர் திறமைகளுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் உள்ளூர் திரைப்படம் மற்றும் இசைத் துறையைத் தொடர்ந்து வளர்ப்போம் என்று நம்புகிறோம். அனைத்து மலேசியர்களின் வற்றாத ஆதரவிற்கு இவ்வேளையில் நாங்கள் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம். மேலும், பண்டிகை சிறப்பு நிகழ்ச்சியைக் கண்டு மகிழ்வார்கள் என்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.
அன்பென்ற மழையிலே எனும் இசை நிகழ்ச்சியை டிசம்பர் 25, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ வானவில் எச்டி (அலைவரிசை 201)-இல் கண்டு களியுங்கள் அல்லது ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.