Home கலை உலகம் ஆஸ்ட்ரோ : ‘செம்மையான சாப்பாடு’ – கலைஞர்களுடன் நேர்காணல்

ஆஸ்ட்ரோ : ‘செம்மையான சாப்பாடு’ – கலைஞர்களுடன் நேர்காணல்

369
0
SHARE
Ad

ஆஸ்ட்ரோ அலைவரிசையில் ஒளியேறிய ‘செம்மையான சாப்பாடு’ சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள், சமையல் கலைஞர்களின் நேர்காணல்:

நவினியா முரளி & லிஷாலினி முரளி, தொகுப்பாளர்கள் & சமையல்காரர்கள்:

1. உங்களின் பின்னணி மற்றும் உங்களைப் பற்றிய சுவாரசியமான விஷயங்களைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#TamilSchoolmychoice

நவினியா: கோகி டான்சர்ஸ் என முன்பு அழைக்கப்பட்ட சஹிபா ஆர்ட்ஸ் & ஈவென்ட்ஸில் நடனக் கலைஞராகப் பணியாற்றியதில் தொடங்கி, எனது இளமைப் பருவத்திலிருந்தே கலைத் துறையில் நான் ஈடுபட்டு வளமான அனுபவத்தைக் கொண்டுள்ளேன். 2011-இல் ‘அவதாரம் ஆரம்பம்’ நடனப் போட்டியின் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராகியதோடு வேறு சில நடனப் போட்டிகளிலும் ஈடுபட்டேன். 2007-இல் நாகா இயக்கிய ‘பாசப் பிணைப்பு’ டெலிநாடகம் மூலம் எனது நடிப்புக்கானப் பயணம் இனிதே தொடங்கியது. ‘சந்தித்த நாள் முதல்’, ‘அவள் தேடியது’ உள்ளிட்டத் திரைப்படங்களிலும் நடித்துள்ளேன். மேலும், ‘ஒத்த கல்லு மூக்குத்தி’, ‘குண்திங் பாவனா’, ‘லட்டு’ மற்றும் பல டெலிமூவிகளின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். நடிப்பதில் ஆழ்ந்த ஆர்வத்தைத் தூண்டியதோடு, எனது திறமையையும் நிபுணத்துவத்தையும் திறம்பட வெளிப்படுத்த அனுமதிக்கும் மாறுபட்ட மற்றும் சவாலானப் பாத்திரங்களில் நடிக்கவும் இந்த அனுபவம் என்னைத் தூண்டியது. நான் கணக்கியல் துறையில் டிப்ளோமா படித்து வருகிறேன். படிப்பில் கவனம் செலுத்த வேண்டியக் காரணத்தால் என்னால் முழுமையாக நடிப்புத் துறையில் ஈடுபட இயலவில்லை. பட்டப்படிப்பு முடிவடைந்த பிறகு, நடிப்புத் துறையில் முழுமையாக ஈடுபடவுள்ளேன். எனது திறமைகளை வெளிப்படுத்தவும், எனது சகாக்களுடன் இணைந்துச் சிறந்து விளங்கவும் தீர்மானித்துள்ளேன்.

லிஷாலினி: என் பெயர் லிஷா. நான் தற்போதுக் கணக்கியல் துறையில் டிப்ளமோ பட்டப்படிப்பைத் தொடர்ந்து வருகிறேன். எனது குடும்பத்தில் இளையக் குழந்தையாக இருந்தாலும், எனது அன்புக்குரியவர்கள் மீது வலுவானப் பொறுப்புணர்வைக் கொண்டுள்ளேன். படைப்பாற்றல் செழித்து வளர்ந்தச் சூழலில், நடிகையான என் அம்மாவின் தொழிலுக்கு நன்றி. சிறு வயதிலேயே நடிப்புத் துறையில் எனக்கு ஆர்வம் வளர அது ஒரு முக்கியக் காரணம். ஒரு விளம்பரத்தில் குழந்தையாக நடிக்கக் கிடைத்த வாய்ப்பினால் நடிப்புத் துறையில் எனது பயணம் தொடங்கியது. இது இத்துறையில் என் ஆர்வத்தையும் தூண்டியது. ஆர்டிஎம்மில் போட்டிகளில் பங்கேற்று நடிப்பு வாய்ப்புகளைத் தொடர்ந்துக் கைப்பற்றினேன். பல்கலைக்கழகப் பணிகள் மற்றும் திட்டங்களுக்கான வீடியோ கிராபிக்ஸ் மற்றும் குறும்படங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு நடிப்பில் எனது திறமையை வளர்த்துக் கொண்டேன்.

2. செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியில் உங்கள் அம்மா மற்றும் சகோதரிகளுடன் சேர்ந்து சமைத்த மற்றும் தொகுத்து வழங்கிய அனுபவம் எப்படி இருந்தது?

நவினியா: சமையலறையில் எனது குறைந்த அனுபவத்தைக் கருத்தில் கொண்டு ஆரம்பத்தில் நான் மிகவும் பயந்தேன். சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது எனக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவம். இருப்பினும் எனது வலிமையைக் கண்டறிந்து நான் செம்மையான சாப்பாடு நிகழ்ச்சிக்கு அர்த்தமுள்ளப் பங்களிப்பை வழங்கினேன். செயல்முறையின் போது நான் சில சமையல் திறன்களைப் பெற்றதோடு பல்வேறுப் பொருட்களைப் பற்றியும் நன்கு அறிந்தேன்.

லிஷாலினி: செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதும் அதில் சமைப்பதும் மிகவும் உற்சாகமாக இருந்தது. என் உடன்பிறந்தவர்கள் அனைவரும் தொலைக்காட்சியில் ஒளியேறும் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதல் முறை. பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், அனுபவத்தின் சிறப்பம்சமாக நாங்கள் பல மதிப்புமிக்க படிப்பினைகளைப் பெற்றோம். சீனப் பள்ளியின் பின்னணியைக் கொண்டிருந்தாலும் நிகழ்ச்சியின் போதுச் சரளமாகத் தமிழில் பேசியது, சுவாத்தியமானப் பிரதேசத்திலிருந்து வெளியேறும் திறன் எனக்கு உள்ளது என்பதை உணர்த்தியது.

3. சமையல்காரர் மற்றும் தொகுப்பாளர் என்ற இரண்டு பாத்திரங்களையும் எவ்வாறு நிர்வகித்தீர்கள்?

நவினியா: எனது திறன்களை வெளிப்படுத்தும் வாய்ப்புகளைச் சவால்கள் வழங்குவதால் அவற்றை நான் தைரியமாக எதிர்கொள்வேன். எனக்கு விரைவான கற்றல் திறன் உள்ளதால் பெரும்பாலும் ஒன்று அல்லது இரண்டு அனுபவங்களுக்குப் பிறகு என்னால் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ள முடியும். நிகழ்ச்சியின் ஆரம்பம் சவாலானதாக இருந்தாலும், இறுதியில் அதைத் தழுவக் கற்றுக் கொண்டேன். மேலும், ஆதரவான இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் குழுவினர் இந்தச் செயல்முறையை மிகவும் எளிதாக்கினர். இவ்வேளையில் அவர்களுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

லிஷாலினி: சமையல் மற்றும் தொகுத்து வழங்குதல் ஆகிய இரு பாத்திரங்களையும் செவ்வென நிர்வகிக்க முடிந்தது. வெறுமனே சமையலில் மட்டும் கவனம் செலுத்தியிருந்தால் சற்றுச் சலிப்பாகத்தான் இருந்திருக்கும். நகைச்சுவை மற்றும் ஈடுபாட்டுடன் கூடிய உரையாடல் ஆகியவை நிகழ்ச்சிக்கு ஒரு சுவாரசியத்தைச் சேர்த்ததோடு மட்டுமல்லாமல் இரண்டு பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் கையாள வழிவகுத்தது.

4. உங்களுக்கு எந்தவிதமானச் சமையல் தொழில் சார்ந்த பயிற்சியும் இல்லாவிட்டாலும் சமையலில் எப்படி ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

நவினியா: ஒவ்வொரு அத்தியாயம் கடந்துச் செல்லும் போதும், சிறு சிறு தகவல்களாக இருந்தாலும், எனது சமையல் அறிவைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டேன். சமையலில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்தபோதிலும், எனது சமையல் திறனைப் பற்றி என் குடும்பத்தினர் அபிப்ராயத்தினால் வீட்டில் சமையல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு அரிதாகவே கிடைத்தது. இருப்பினும், நிகழ்ச்சியில் பெற்ற அனுபவத்தின் மூலம், சமையலில் என் ஆர்வம் அதிகரித்தது. சுயமாக வீட்டில் சமையல்களையும் பரிசோதனைச் செய்ய ஆரம்பித்தேன்.

லிஷாலினி: சகோதரியுடன் வெளிநாட்டில் படிக்கும் போது, எங்களில் ஒருவர் சாப்பாடு தயாரிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டியிருந்தது. நான் இணையம் வாயிலாகப் பல்வேறுச் சமையல்களை ஆராய்ந்தேன். உணவைத் தயார் செய்ய டிக்டோக் மற்றும் பிற வலைத்தளங்களில் சமையல் குறிப்புகளைப் பெற்றேன். நேர்மறையானக் கருத்துகளும் பாராட்டுகளும் சமையலில் என் ஆர்வத்தை அதிகரித்தன. மேலும், என் பாட்டி மற்றும் அம்மா சமையலறையில் உணவுகளைத் தயாரிப்பதைப் பார்த்தது, சுவையான உணவைத் தயாரிக்க அன்பு மற்றும் பொறுமையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்தியது. சமையலைத் தவிர்த்து, பேக்கிங்கிலும் எனக்கு ஆர்வம் உண்டு.

5. இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உங்களை ஈர்த்தது என்ன?

நவினியா: தனிப்பட்ட வளர்ச்சிக்கான சவால்கள் மற்றும் வாய்ப்புகளின் தனித்துவமானக் கலவையினால் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடிவு செய்தேன். சமையலில் குறைந்த அனுபவம் இருந்தபோதிலும், சமையல் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு என்னால் தவிர்க்க முடியாத ஓர் அற்புதமானச் சவாலை அளித்தது. சிறப்பாக ஒத்துழைக்கும் குழுவுடன் இணைந்துப் பணியாற்றுவதும் புதிய சமையல் திறன்களைக் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்கான எனது முடிவை மேலும் உறுதிப்படுத்தியது.

லிஷாலினி: இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க என்னை ஈர்த்தது பல்வேறு வகையான சமையல் வகைகளும் பாரம்பரிய சமையல் முறைகளைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புமாகும். கூடுதலாக, குழு உறுப்பினர்களுடன் ஒத்துழைத்துப் பணியாற்றுவது என்னை ஈர்த்த மற்றொரு கவர்ச்சியான அம்சமாகும்.

6. செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியில் நீங்கள் ரசித்தச் சில பகுதிகள் என்ன?

நவினியா: இந்த நிகழ்ச்சியின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று, எங்களைத் தனித்துவமாக வெளிப்படுத்த எங்களுக்கு வழங்கப்பட்டச் சுதந்திரம். அதுமட்டுமின்றி, எங்களின் கருத்துக்களை ஏற்கும் இயக்குநரின் தன்மை தயாரிப்புச் செயல்முறைகளை மேலும் எளிதாக்கியது.

லிஷாலினி: விருந்தினர்களுக்குத் தயாரித்த உணவுகளைப் பரிமாறுதலும் நிகழ்ச்சி முழுவதும் நானாக இருக்க வழங்கப்பட்ட சுதந்திரமும் இந்நிகழ்ச்சியில் நான் இரசித்த சில பகுதிகள்.

7. செம்மையான சாப்பாடு நிகழ்ச்சியில் சமைத்த உணவு வகைகளில் உங்களுக்குப் பிடித்த உணவு(கள்) என்ன?

நவினியா: மூங்கில் பிரியாணியுடன் மூங்கில் கோழிச் சம்பல்.

லிஷாலினி: மூங்கில் கோழிப் பிரியாணி, ரெண்டாங்குடன் லெமாங் மற்றும் பல.