
புத்ரா ஜெயா : சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற மலாய்க்காரர் அல்லாத மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன்ஸ் கல்வி வாய்ப்புகளை சரிசமமான முறையில் வழங்குவது நாட்டில் இனப் பதற்றத்தைத் தணிக்கும் ஒரு முயற்சி என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் விவரித்தார்.
அனைத்து மலேசியர்களுக்கும் இன பேதமற்ற நல்ல முடிவு இது எனவும் அன்வார் வலியுறுத்தினார்.
எஸ்பிஎம் தேர்வுகளில் 10-ஏ தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் இன பேதமின்றி, மெட்ரிகுலேஷன்ஸ் வகுப்புகளில் வாய்ப்புகள் வழங்கப்படும் என்ற பிரதமரின் அறிவிப்பு பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
மெட்ரிகுலேஷன்ஸ் வாய்ப்புகளின் ஒதுக்கீட்டால் ஆண்டுதோறும் கல்வி அமைச்சுக்கு இனப் பதற்றம் ரீதியான நெருக்கடிகள் ஏற்படுவதாகவும் இனி அது தணியும் என்றும் அன்வார் மேலும் கூறினார்.
அரசாங்க ஊழியர்களிடையே இன்று அவர் நிகழ்த்திய மாதாந்திர உரையின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
எஸ்டிபிஎம் என்னும் ஆறாம் படிவத் தேர்வுகளுக்கு மாற்றாக அரசாங்கத்தால் சிறந்த மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன்ஸ் படிக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இதுவரையில் 90 விழுக்காடு பூமிபுத்ரா மாணவர்களுக்கும் 10 விழுக்காடு மற்ற இன மாணவர்களுக்கும் மெட்ரிகுலேஷன்ஸ் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வந்தன.
பிரதமர் நஜிப் பதவிக் காலத்தின்போது இந்திய மாணவர்களுக்கு 2,500 மெட்ரிகுலேஷன்ஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டன.
தனது புதிய அறிவிப்பு குறித்து கல்வி அமைச்சு விரிவான விளக்கங்களை வழங்கும் எனவும் அன்வார் குறிப்பிட்டார்.
இந்த முடிவால் பூமிபுத்ரா உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் உறுதி வழங்கினார். நாடு முன்னேற, சிறந்த மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மறுக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.