
சென்னை: கடந்த சில நாட்களாக என்ன பேசப் போகிறார் என உலகத் தமிழர்களும், அதிமுகவினரும் எதிர்பார்த்துக் காத்திருக்க – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று வாய்திறந்து பேசி விட்டார். தமிழ் நாடு முழுக்க செங்கோட்டையன் பெயரும் அவர் சொன்ன செய்திகளும்தான் ஊடக விவாதங்களாக உருவெடுத்திருக்கின்றன.
பிரிந்தவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய எடப்பாடி பழனிசாமி முன்வர வேண்டும் என செங்கோட்டையன் கூறியது பரவலான பாராட்டுக்களைப் பெற்றாலும், அவர் ஏதோ உள்நோக்கத்தோடு செயல்படுகிறார் என்பது சில அரசியல் பார்வையாளர்களின் கருத்தாகும்.
குறிப்பாக, இன்றைய செய்தியாளர் சந்திப்பில் செங்கோட்டையன், அடுத்த 10 நாட்களுக்குள் எடப்பாடியார் நகர்வுகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கெடு விதித்தது, ஒரு தவறான வியூகமாகக் கருதப்படுகிறது. இன்றைய நிலையில் அதிமுகவின் பலம் பொருந்திய பொதுச் செயலாளராக எடப்பாடி திகழ்கிறார். அவருக்குக் கெடு விதித்தால், கண்டிப்பாக அவர் பின்பற்றப் போவதில்லை. அடுத்த 10 நாட்களில் அவர் செங்கோட்டையனுக்கு பதில் சொல்லாமல் கடந்து விட்டால், அதன்பிறகு பந்து மீண்டும் செங்கோட்டையன் காலடிகளுக்கு வந்து சேரும்.
நெருக்கடி, அதன்பின்னர் செங்கோட்டையனுக்குத்தான்! அவர் அதன் பிறகு என்ன செய்வார்? கட்சியிலிருந்து வெளியேறுவாரா? அல்லது அதிமுகவின் மாற்று சக்தியாக உருவெடுப்பாரா? என்ற கேள்விகளும் எழுகின்றன.
செங்கோட்டையன், எடப்பாடியாரை அடுத்த முதலமைச்சராக அறிவிக்காததும், அவரின் அறிவிப்பில் உள்ள முக்கிய குறைபாடாகப் பார்க்கப்படுகிறது.
எனினும், இப்போதைக்கு அனைவரின் பார்வையும் எடப்பாடியார் மீதுதான்! அவர் பதில் கொடுப்பாரா? அல்லது செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் தராமல் கடந்து போவாரா?
டிடிவி தினகரனின் விலகல்

இதற்கிடையில் டிடிவி தினகரனும் பாஜக கூட்டணியில் இருந்து விலகியிருப்பது தமிழ் நாடு அரசியலில் பேசு பொருளாகியுள்ளது.
அதிமுகவிலிருந்து பிரிந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கட்சி (அமமுக) என்ற தனிக்கட்சி கண்ட டிடிவி தினகரன் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வந்தார்.
அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக டிடிவி தினகரன் நேற்று வியாழக்கிழமை (4 செப்டம்பர்) அறிவித்தார். அதிமுக-பாஜக இணைந்த கூட்டணி ஏற்பட்டதிலிருந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த ஓ.பன்னீர் செல்வம் அணி, அமமுக கட்சி, ஆகிய தரப்புகள் அதிருப்தி கொண்டிருக்கின்றன.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே, ஓ.பன்னீர் செல்வம் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார். நேற்று விலகியுள்ள டிடிவி தினகரன் இனி பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களுடன் செங்கோட்டையனும் இணைந்து கொள்வாரா என்ற பரபரப்பும் அரசியல் வட்டாரங்களில் ஏற்பட்டுள்ளது.





