Home Photo News அமரர் டான்ஸ்ரீ சுப்ரா: நிர்வாகச் செயலாளராக மஇகாவில் நுழைந்து துணைத் தலைவராக உயர்ந்தவர்

அமரர் டான்ஸ்ரீ சுப்ரா: நிர்வாகச் செயலாளராக மஇகாவில் நுழைந்து துணைத் தலைவராக உயர்ந்தவர்

608
0
SHARE
Ad

(கடந்த 26 அக்டோபர் 2025-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமரர் மக்கள் தலைவர் டான்ஸ்ரீ சி.சுப்ரமணியம் அவர்களின் 81-வது பிறந்த நாள் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சியில் செல்லியல் இணைய ஊடக ஆசிரியர் இரா.முத்தரசன் நிகழ்த்திய வரவேற்புரையின் முக்கியப் பகுதிகள்)

டான்ஸ்ரீ சுப்ராவின் மறக்க முடியாத இனிய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொள்ள சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருக்கும் சுப்ராவின் பல்கலைக் கழகத் தோழரும் சிங்கப்பூர் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான திரு அருண் மகிழ்நன் அவர்களே!

திரு அருண் மகிழ்நன் அவர்கள் தமிழ் மின்மரபுடமைத் திட்டத்தின் பொறுப்பாளராகவும், சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியத்தின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றுகிறார் என்பது அவரின் இன்னொரு சிறப்பு.

#TamilSchoolmychoice

திரு அருண் மகிழ்நனுடன் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருக்கும் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ச் சேவைகள் பிரிவு தலைவரான திரு அழகிய பாண்டியன் சிங்கப்பூர்த் தமிழர் கலைக் களஞ்சியம் திட்டத்தின் துணை ஆசிரியராக பணியாற்றுகிறார் என்பது அழகிய பாண்டியனின் இன்னொரு சிறப்பு.

டான்ஸ்ரீ சுப்ரா அவர்களின் அன்புத் துணைவியார் புவான்ஸ்ரீ தீனா சுப்பிரமணியம் அவருடன் வருகை தந்திருக்கும் அவரின் குடும்பத்தினர் புதல்வர்கள் ஆனந்த், சுந்தர், புதல்வி பிரியா அவரின் கணவர் சத்யா அவர்களே!

நமக்கெல்லாம் சிறந்த எழுத்தாளராகவும் நல்லதொரு மருத்துவராகவும், மக்கள் ஓசையில் மருத்துவக் கேள்விகளுக்கு புதுக்கவிதைகளின் ரசனையோடு பதில் எழுதுபவராகவும் அறியப்பட்ட டாக்டர் சண்முக சிவா அவர்கள் ஓர் இலக்கியவாதி என்ற முறையிலும் அவர் டான்ஸ்ரீ சுப்ராவின் சம்பந்தி என்ற முறையிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

சுப்ராவின் குடும்பத்தினர் தவிர இங்கு வருகை தந்திருக்கும் ஒவ்வொருவரும் சுப்ராவுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டவர்கள். அவரின் நண்பர்கள். ஆதரவாளர்கள். சுப்ரா மீதான அபிமானத்தின் காரணமாக இங்கு வந்திருப்பவர்கள்.

முதலில் ஒரு சம்பவத்தின் காட்சி விவரிப்புடன் என் உரையைத் தொடங்குகிறேன்.

சுப்ரா அரசியலில் நுழைவதற்கு காரணமான சம்பவங்கள்

இரா.முத்தரசன்

1968-ஆம் ஆண்டு காலகட்டம். அப்போது மஇகா தலைமையகம் இன்று லிட்டல் இந்தியா என்று அழைக்கப்படும் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் காசி பிராமின் என்ற உணவகத்தின் மேல்மாடியில் இயங்கி வந்தது.

அந்த அலுவலகத்தில் ஒரே ஒருவர்தான் குமாஸ்தாவாகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் பெயர் சுவாமிநாதன்.

மஇகா தலைமையகத்திற்கு தன் சொந்த அலுவல் காரணமாக அடிக்கடி வருவார் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் இளைய சகோதரர் வழக்கறிஞர் வி.எல்.காந்தன். அப்போது அவர் டத்தோ இல்லை. மாணிக்கவாசகம் அப்போது மஇகாவின் தேசியத் துணைத் தலைவராக இருந்தார்.

மஇகா அலுவலகத்திற்கு வரும் போதெல்லாம் ஒரு மேசையில் அமர்ந்து மஇகாவின் பழைய ஆவணங்களை பார்வையிட்டுக் குறிப்புகள் எடுத்துக் கொண்டிருக்கும் ஓர் இளைஞரைப் பார்க்கிறார் காந்தன்.

கவர்ச்சிகரமான தோற்றம் கொண்ட அந்த இளைஞர் என்ன செய்கிறார் என அலுவலகப் பணியாளர் சுவாமிநாதனிடம் விசாரிக்கிறார் காந்தன்.

மலாயாப் பல்கலைக் கழகப் பட்டப்படிப்பை முடித்து விட்டு, மாஸ்டர்ஸ் பட்டத்திற்காக ஆய்வுகள் செய்து கொண்டிருக்கும் மாணவர் அவர். 1945 முதல் 1955 வரை மலாயா இந்தியர்களின் அரசியல் பங்கேற்பு என்ற தலைப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டிருப்பதால் அதற்காக மஇகாவின் பழைய ஆவணங்களை பார்வையிட அடிக்கடி வருகிறார் என்று கூறிய சுவாமிநாதன், அவர் பெயர் சுப்பிரமணியம் என்கிறார்.

அங்கிருந்துதான் தொடங்கியது சுப்ராவின் வாழ்க்கையில் அரசியல் திருப்பம்.

சுப்பிரமணியத்துடன் அறிமுகம் செய்து கொண்ட காந்தன், “எனது சகோதரர் (மாணிக்கவாசகம்) இளைஞர்கள், படித்த பல்கலைக் கழகப் பட்டதாரிகள் அரசியலுக்கு வரவேண்டும் என அடிக்கடி கூறுவார். அதிலும் நீங்கள் மாஸ்டர்ஸ் பட்டத்திற்காக இந்தியர்களின் பங்கேற்பு குறித்து அரசியல் ஆய்வுகள் செய்வதை அறிந்தால் மிகவும் மகிழ்ச்சியடைவார்” என்று கூறி கப்ரா மாணிக்காவைச் சந்திக்க ஏற்பாடுகள் செய்கிறார்.

அதே நேரத்தில் சுப்ரா மலாயாப் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது தமிழ் மொழிக் கழகத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியிருந்தார்.

தமிழ் மொழிக் கழகத்தின் நிகழ்ச்சிகள் மூலமும் மாணிக்காவுக்கு ஓரளவுக்கு அறிமுகமாகியிருந்தார் சுப்ரா. முதலாவது தமிழ் ஆராய்ச்சி மாநாடு மலாயாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றபோது, அதனை முன்னின்று நடத்திய பேராசிரியர் தனிநாயகம் அடிகளாரின் மாணவராக அங்கு கல்வி பயின்று கொண்டிருந்தார் சுப்ரா. மாணவர்கள் சார்பிலான வரவேற்புக் குழுவிலும் பணியாற்றியதால் மாணிக்காவுடன் ஓரளவுக்கு அவருக்கு அறிமுகம் இருந்தது.

அதே வேளையில் ரேடியோ பாலா என அழைக்கப்பட்ட இரா.பாலகிருஷ்ணனுடனும் சுப்ராவுக்கு நல்ல நட்பு இருந்தது. ரேடியோ பாலாவும் சுப்ராவைப் பற்றி மாணிக்காவிடம் எடுத்துக் கூற, சுப்ராவைச் சந்தித்தார் மாணிக்கா.

மஇகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளரான சுப்ரா

நியூயார்க் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றும் சுப்ரா

உடனடியாக, மஇகா தலைமையகத்தின் நிர்வாகச் செயலாளராக மஇகா தேசியத் தலைவர் துன் சம்பந்தனின் ஒப்புதலுடன் சுப்ராவை நியமித்தார் மாணிக்கா.

சுப்ராவே பல முறை கூறியிருக்கிறார். என்னை நிர்வாகச் செயலாளராக நியமித்தது துன் சம்பந்தன்தான். ஆனால் மாணிக்காதான் அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார் என சுப்ரா கூறியிருக்கிறார்.

இப்படித்தான் தொடங்கியது சுப்ராவின் அரசியல் பயணம்.

இந்த மஇகா தலைமையகக் கட்டடம் 1969-இல் கட்டி முடிக்கப்பட்டு, மஇகா தலைமையகம் இயங்கத் தொடங்கியதும், இதே கட்டடத்தில்தான் சுப்ரா நிர்வாகச் செயலாளராகக் கால் பதித்தார்.

அப்போது அவர் லெம்ப்ரெட்டா என்ற ஸ்கூட்டரைப் பயன்படுத்தித்தான் அலுவலகத்திற்கு வருவார் என அவரை அறிந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். பின்னர் அவர் ஒரு பழைய வோக்ஸ்வோகன் காரை வாங்கிப் பயன்படுத்தி வந்தார்.

1973-இல் மாணிக்கா தேசியத் தலைவரானதும் சுப்ரா தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

எல்லோருக்கும் தெரிந்த இதை ஏன் இப்போது மீண்டும் நான் நினைவுபடுத்துகிறேன் என்பதற்கு காரணம் உண்டு. இந்த நிகழ்ச்சி குறித்து விமர்சனங்கள் தெரிவித்த ஒரு சிலர் ஏன் மஇகா தலைமையகத்தில் நடத்துகிறீர்கள் எனக் கேட்டார்கள். யாருக்குப் பிடிக்கிறதோ இல்லையோ சுப்ராவின் ஆன்மா இன்னும் இந்தத் தலைமையகத்தில்தான் உலவிக் கொண்டிருக்கும் என்பது எனது கருத்து.

காரணம், தன் அரசியல் பயணம் முழுவதையும் அவர் இங்கிருந்துதான் தொடங்கினார் – இங்கிருந்துதான் அரசியலில் உச்சங்களைத் தொட்டார். கட்சியில் நடந்த பல போராட்டங்களையும் அவர் இங்கிருந்துதான் சந்தித்தார். எந்தக் காலத்திலும் அவர் மஇகாவை விட்டுக் கொடுத்ததுமில்லை. மஇகாவை விட்டுப் போனதுமில்லை. எனவேதான் சுப்ராவின் வாழ்க்கையோடும் ஆன்மாவோடும் இரண்டறக் கலந்த இந்த மஇகா தலைமையகக் கட்டடத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்தோம்.

அத்துடன், அடுத்த ஆண்டில் இந்தக் கட்டடத்திற்குப் பதிலாக புதிய மஇகா தலைமையகக் கட்டடம் உருவாகவிருப்பதால், ஒரு நினைவாக இந்த நேதாஜி மண்டபத்திலேயே, இந்த நிகழ்ச்சியை நடத்த முன்வந்தோம்.

சுப்ராவுடனான எனது அறிமுகம்

நியூயார்க் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் உரையாற்றும் சுப்ரா

இந்த மஇகா தலைமையகக் கட்டடம் எனக்கும் பல முனைகளில் அணுக்கமானது. இங்குதான் நான் முதன் முதலாக சுப்ராவை நேரடியாகச் சந்தித்தேன்.

ஏற்கனவே அவரைப் பொது நிகழ்ச்சிகளில் சந்தித்திருக்கிறேன். ஒருமுறை அமரர் டாக்டர் பிடி அரசு செந்துல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் செந்தூலில் நடந்த பொங்கல் விழாவில் கலந்து கொள்ள வந்த போது மாணவனாக அந்தப் பொங்கல் விழாப் போட்டிகளில் பங்கெடுத்த நான் அவரைச் சந்தித்திருக்கிறேன்.

மற்றபடி அவருடன் நேரடி அறிமுகமில்லை. நான் அவருடன் நெருக்கமாக இருந்த காலகட்டங்களில் எங்கள் இருவருக்கும் இடையிலான அணுக்கம் பற்றி பல ஆரூடங்கள் கூறப்பபட்டன. நான் அவருக்கு உறவினர் என்று கூட கூறினார்கள். ஆனால் அவை எதுவுமே உண்மையில்லை.

சுப்ராவுடனான முதல் சந்திப்பு

இந்த வேளையில் நான் சுப்ராவை முதன் முதலில் சந்தித்த சூழலையும் விவரிப்பது பொருத்தமாக இருக்கும். அதன் மூலம் எங்களின் இருவருக்கும் இடையிலான தொடர்பு எப்படி அன்று தொடங்கி இன்று இந்த நிகழ்ச்சி வரை தொடர்கிறது என்பதும் தெரியவரும்.

1977-ஆம் ஆண்டில் மஇகா துணைத் தலைவர் பதவிக்கு சாமிவேலுவும் சுப்ராவும் போட்டியிட்டபோது, தமிழ் நேசன் நாளிதழ் ஒரு கட்டுரைப் போட்டியை நடத்தியது. துணைத் தலைவராக யார் வெல்ல வேண்டும்? என்பதுதான் போட்டி. சுப்ராவை ஆதரிக்கும் கட்டுரைகளுக்கு மூன்று பரிசுகள். சாமிவேலுவை ஆதரிக்கும் கட்டுரைகளுக்கு 3 பரிசுகள்.

அந்தக் கட்டுரைப் போட்டியில் நானும் கலந்து கொண்டேன். எனக்கு அரசியலும் தெரியாது. அரசியல் ஆர்வமும் கிடையாது. எழுத வேண்டும் என்ற இலக்கியத் தாகம்தான் அதிகம் இருந்தது.

சிலரிடம் கட்டுரை எழுதுவது குறித்து ஆலோசனைகள் கேட்டேன். கேட்ட அனைவரும் அதற்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்க வேண்டும் – அரசியல் கட்டுரையாயிற்றே – எனக் கூறி விட்டார்கள். நானும் எனக்குத் தெரிந்த தகவல்களைத் திரட்டி சுப்ராவை ஆதரித்து அந்தக் கட்டுரையை எழுதினேன். சுப்ராவை ஆதரித்த கட்டுரைகளில் என் கட்டுரைக்கு முதல் பரிசு 50 ரிங்கிட் கிடைத்தது.

இரண்டாவது பரிசு மறைந்த கவிஞர் தி.ப.செழியனுக்கு.

சாமிவேலுவை ஆதரித்த கட்டுரைகளில் முதல் பரிசு கு.சா.பெருமாள் அவர்களுக்கு.

அப்போது எனக்கு வயது 19 தான்!

அதன் பின்னர் நான் புதிய சமுதாயம் இதழில் ஓராண்டு காலம் பணியாற்றி விலகி விட்டு வேலை தேடிக் கொண்டிருந்தேன். அப்போது டாமன்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டு மஇகாவின் தலைமைச் செயலாளராக சுப்ரா பணியாற்றிக் கொண்டிருந்தார்.

புதிய சமுதாயத்திற்கு வந்த ஒரு நண்பர், “சுப்ரா இப்போது துணையமைச்சர் இல்லையென்றாலும் நிறைய பேரைச் சந்ததித்து வேண்டிய உதவிகளைச் செய்கிறார்” எனக் கூறி அவரை அணுகுங்களேன் என்றார்.

அந்தக் காலத்தில் தலைவர்கள் எவ்வளவு எளிதாக அணுகக் கூடியவர்களாக இருந்தார்கள் என்பதற்கு நான் கூறப்போகும் இந்த சம்பவமும் ஓர் உதாரணமும்.

மஇகா தலைமையகத்தில் அலுவலராக இணைந்தேன்

நானும் சரி முயற்சி செய்து பார்ப்போமே என்று மஇகா தலைமையகத்திற்குப் போன் செய்து நான் தலைமைச் செயலாளர் சுப்பிரமணியத்திடம் பேச வேண்டும் என்றேன். உடனே சுப்ராவிடம் தொடர்பு கொடுக்கப்பட்டது. நான் அழைத்தது ஒரு வெள்ளிக்கிழமை. உங்களைச் சந்திக்க வேண்டும் என்று என் பெயரைக் கூறினேன். அப்போது அவருக்கு நான் யார் என்றே தெரியாது.

“சரி உங்களைச் சந்திக்கிறேன். ஆனால் எதற்கு என்னைச் சந்திக்க விரும்புகிறீர்கள் என்று கூறுங்கள்” என்றார் அவர். என் வேலை விஷயமாக உங்களைப் பார்க்க வேண்டும் என்றேன். சரி திங்கட்கிழமை வாருங்கள் என்றார்.

நான் அவரைச் சந்திக்கச் சென்றபோது, எனது பள்ளி ஆவணங்களையும் எம்சிஇ (இன்றைய எஸ்பிஎம் தேர்வுக்கு நிகரானது) தேர்வு முடிவுகளோடு சுப்ரா குறித்து நான் எழுதிய முதல் பரிசு பெற்ற கட்டுரையின் பிரதி ஒன்றையும் அவரிடம் காட்டினேன்.

அந்த நேரத்தில் மஇகா தலைமையகத்தில் தமிழ் நன்றாகத் தெரிந்த ஓர் ஊழியரைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.

எனது ஆவணங்களைப் பார்த்து விட்டு ஒரு மாதம் கழித்து வரச் சொன்னார்கள். சுப்ரா மீண்டும் என்னைச் சந்தித்து விட்டு, உங்களைப் பற்றி விசாரித்தோம். எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை இருந்தாலும் வேலை தருகிறோம் என்றார். விசுவாசமாக இருப்பீர்கள் என நம்புகிறேன். நானும் உறுதியளித்தேன். அந்த விசுவாசம் இன்றுவரை தொடர்கிறது.

நான் சு்பரா குறித்து எழுதிய கட்டுரையினால்தான் அந்த வேலையை சுப்ரா எனக்குத் தந்தார் என்பதை பிற்காலத்தில் அவரே என்னிடம் கூறியிருக்கிறார்.

என்னைப் பற்றி என்ன விசாரித்தார்கள் என்பதை பிற்காலத்தில் நான் தெரிந்து கொண்டேன். நான் சாமிவேலு அனுப்பிய ஆளா என்பதைத்தான் ஆராய்ந்திருக்கிறார்கள். ஒரு தீவிர அரசியல் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலகட்டம் அது .

எனவே, இன்று இந்த நிகழ்ச்சி நடத்துவதுவரை தொடரும் சுப்ராவின் அறிமுகம் இதே மஇகா தலைமையகத்தில் இருந்துதான் தொடங்கியது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏன் இந்த நிகழ்ச்சி?

அடுத்ததாக ஏன் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம் என்பது குறித்தும் ஒரு சிறு விளக்கம் தர விரும்புகிறேன். சுப்ரா உடல் நலத்துடன் இருந்தபோது அவரின் நண்பர்கள் ஆதரவாளர்களுக்கிடையே அடிக்கடி சந்திப்புகள், விருந்துபசரிப்புகள் நடைபெறும்.

ஆனால் அவரின் உடல்நலக் குறைவு, மறைவு ஆகிய காரணங்களால், அத்தகைய சந்திப்புகள் அதற்குப் பின்னர் நிகழாமல் போனது.

அவரின் மறைவுக்குப் பின்னர் ஆதரவாளர்கள் நண்பர்கள் சந்திக்கும் வண்ணம் ‘ஆடிய ஆட்டமென்ன’ என்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தோம். டத்தோ டாக்டர் பாஸ்கரன்தான் அதனை முன்னின்று ஏற்பாடு செய்தார். அதைச் சொல்லாவிட்டால் நாளைக்கு காலையிலேயே முதல் வேலையாக போன் மூலம் அவரிடம் இருந்து பாட்டு விழும். அதனால் கூறி விடுகிறேன்.

அண்மையில் நடந்த தனது மகனின் கல்யாணத்திலேயே சுப்ராவுக்கான அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தேன் எனக் கூறி மகிழ்ந்தவர் பாஸ்கரன்.

எனவே, சுப்ராவை நினைவுகூரும் வண்ணம் அவருடனான நட்பைப் பகிர்ந்து கொள்ளும் நாம் அனைவரும் ஏதாவது ஒரு வகையில் சந்திக்க வேண்டும் என பல நண்பர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

அதன்படி 2022-இல் மறைந்த சுப்ராவுக்கு கடந்த ஆண்டு பிறந்த நாள் சிறப்பு வழிபாட்டை செந்துல் தண்டாயுதபாணி ஆலயத்தில் நடத்தினோம்.

இந்த ஆண்டு அவர் மறைந்த நினைவு நாளான ஜூலை 5-ஆம் தேதியை முன்னிட்டு செந்துல் சிவன் ஆலயத்தில் வழிபாடு நடத்தினோம்.

இன்றைய பிறந்த நாளை கொஞ்சம் வித்தியாசமாக செய்வோமே என்ற கோணத்தில் எழுந்ததுதான் இப்போது நீங்கள் அனைவரும் கலந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சிக்கான செலவினங்களை சுப்ராவுக்கு நெருக்கமான நண்பர்கள் அவ்வப்போது முன்வந்து ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் இதனை விளம்பரத்திற்காக செய்யவில்லை – மாறாக சுப்ரா மீது கொண்டுள்ள அபிமானம், அன்பு காரணமாக செய்கிறார்கள் என்பதால் அவர்கள் அதுகுறித்து பகிரங்கமாக அறிவிக்கவும் விரும்பியதில்லை.

எனவே, இது நாங்கள் தொடர்ச்சியாக செய்து வரும் ஒரு நிகழ்ச்சியே தவிர, யாரும் கேட்டுக் கொண்டோ, யாரையும் பிரபலப்படுத்துவதற்காகவோ நாங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துவதில்லை.

இந்த நிகழ்ச்சி தொடர்பில் நாங்கள் சுப்ராவின் குடும்பத்தினரையும் எந்தத் தொந்தரவும் செய்வதில்லை.

மரியாதை கருதி அவர்களுக்குத் தெரிவிப்போம். அவர்களும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் சுப்ராவின் ஆதரவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் மரியாதை தந்து இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் இன்றும் கலந்து கொண்டிருக்கிறார்கள். புவான்ஶ்ரீ அவர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எங்களின் நன்றி.

சரவணனை அழைத்தது ஏன்?

ஏன் இந்த விளக்கத்தைக் கூறுகிறேன் என்பதற்கும் காரணம் உண்டு. ஒரு சிலர் சுப்ராவுக்கு எதிரணியில் செயல்பட்ட டத்தோஶ்ரீ சரவணனை அழைத்திருக்கிறீர்ளே என்று நேரடியாகவே கேட்டார்கள். ஒரு சிலர் தங்களின் எதிர்ப்பை குரல் பதிவு மூலம் எனக்கு அனுப்பினார்கள்.

அவர்களுக்கெல்லாம் நான் தரும் பதில் இதுதான்.

இந்த நிகழ்ச்சி சரவணன் கூறி நாங்கள் ஏற்பாடு செய்யவில்லை. முன்பு கூறியபடி ஏற்கனவே தொடர்ச்சியாக நாங்கள் செய்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான்.

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துவிட்டு, டத்தோஶ்ரீ சரவணனை அழைத்து உங்களால் வரமுடியுமா என்று கேட்டேன். அந்த தேதியில் வேறு நிகழ்ச்சிகள் இல்லை என்பதால் கலந்து கொள்கிறேன் எனக் கூறினார்.

எனவே, நாம் ஏற்கனவே, ஏற்பாடு செய்துவிட்ட ஒரு நிகழ்ச்சியில்தான் டத்தோஶ்ரீ கலந்து கொள்ள ஒப்புக் கொண்டாரே தவிர, அவர் கூறி இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவில்லை.

அவரை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்துத்தான் அவரிடம் நான் பெயர் வாங்க வேண்டும், அபிமானத்தைப் பெறவேண்டும் என்பதில்லை. காரணம், அவரைப் பல்லாண்டுகளாக எனக்கு நன்கு தெரியும் என்பதோடு கடந்த ஆண்டு நான் எழுதிய அன்வார் இப்ராகிம் நூல்வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு எனக்கு மரியாதை தந்தவர் அவர்.

அத்துடன் இன்னொன்றையும் நான் இங்கே கூறிக் கொள்ள வேண்டும்.இதையும் ஏன் எழுந்துள்ள விமர்சனங்களுக்கு பதிலாகத்தான் கூற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டதே தவிர வேறு காரணங்களால் அல்ல. பல நிகழ்ச்சிகளுக்கு நிதி வழங்கி ஆதரவளித்து வரும் சரவணன் அவர்களை நாங்கள் யாரும் இந்த நிகழ்ச்சிக்காக நிதியுதவி கேட்டு அணுகவில்லை. எனவே, அவரின் நிதியுதவியால்தான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்பதும் உண்மையல்ல.

தேசியத் தலைவர் விக்னேஸ்வரனுக்கும் நன்றி

அத்துடன் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் அவர்களையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்திருந்தோம். ஆனால் அவர் வெளிநாடு செல்லவிருப்பதால் நிழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது எனக் கூறியதோடு, இன்று இந்த நிகழ்ச்சிக்கு நேதாஜி மண்டபத்தை இலவசமாகத் தாருங்கள் எனப் பெருந்தன்மையோடு மஇகா தலைமையகத்திற்கு உத்தரவிட்டார். அவருக்கும் எங்களின் நன்றி.

டத்தோஶ்ரீ சரவணனை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு.

சுப்ராவின் சிறப்புகளை நமக்கு நாமே நண்பர்களும், ஆதரவாளர்களும் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வதை விட அவருக்கு நேர் எதிர் அணியில் நின்று அரசியல் போர் செய்த ஒருவரை அழைத்து சுப்ராவின் பெருமைகளைப் பேசச் செய்வதுதான் சிறப்பு என நினைத்தோம்.

பலரும் அறியாத மற்றொரு உண்மை. சுப்ரா உடல் நலம் குன்றுவதற்கு முன்னால் சில ஆண்டுகளாகவே சுப்ரா அவர்கள் சரவணனைச் சந்தித்து வந்தார். அதன் மூலம் இருவருக்கும் இடையில் நல்ல அரசியல் நெருக்கம் உருவாகி வந்தது. இந்த நிகழ்ச்சிக்காக நான் இதனைக் கூறவில்லை.

இதற்கான மற்றொரு சாட்சி இன்று இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் டத்தோ சுப்ரா ரத்னவேலு அவர்கள். அவரின் இல்லத்தில்தான் சுப்ரா-சரவணன் இருவரின் சந்திப்புகள் அடிக்கடி நடந்தன. சந்திப்புகள் முடிந்தவுடன் சில சமயங்களில் டத்தோஶ்ரீ சரவணனைச் சந்தித்தது குறித்து என்னிடம் கூறியிருக்கிறார்.

இங்கு வந்திருக்கும் புவான்ஶ்ரீ தீனா அவர்களுக்கும் இது குறித்து நன்கு தெரியும்.

ஆனால் அன்றைய அரசியல் சூழ்நிலையில் இதனையெல்லாம் வெளியே கூற முடியவில்லை.

எனவே, சுப்ராவுக்கு எதிரணியில் இருந்தவர் என்பதால் மட்டுமல்ல – சுப்ராவின் இறுதிக் காலத்தில் அவரின் நற்பண்புகளை அறிந்து அவர் மீது அபிமானம் கொண்டவர் – என்ற முறையிலும் அவர் இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்பதும் அவர் குறித்து உரை நிகழ்த்துவதும் பொருத்தமானதே எனக் கருதுகிறேன்.

சுப்ரா குறித்துப் பேசவிருக்கும் அருண் மகிழ்நன்

நிறைவாக அருண் மகிழ்நனைப் பற்றி சில வார்த்தைகள்.

பல ஆண்டுகளுக்கு முன்னால் அருண் அவர்களை சுப்ராவின் இல்லத்தில் சந்தித்தேன். நான் சுப்ரா இல்லத்திற்கு வந்தபோது அருண் அவர்களும் சுப்ரா அவர்களும் சோபாவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். அப்போது அவர் யார் என்பது எனக்குத் தெரியாது.

சுப்ரா என்னை அழைத்து இவரைத் தெரியும்தானே என்றார். நானோ தெரியாது என்றேன். ‘என்னது இவரைத் தெரியாதா?’ என்று  ஆச்சரியத்தோடு கேட்டார் சுப்ரா. அப்போதுதான் அருண் ஏதோ ஒரு வகையில் முக்கியமானவர் – சுப்ராவுக்கு நெருக்கமானவர் – என்பதைத் தெரிந்து கொண்டேன்.

எனது பல்கலைக் கழகத் தோழர் என்றும் சுப்ரா அருண் மகிழ்நனை அறிமுகப்படுத்தினார்.

அந்த சம்பவம் நடந்து பல ஆண்டுகள் கழிந்து திரு முத்து நெடுமாறன் மூலம் அருணுடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் சிங்கப்பூரில் அருண் மேற்கொண்டு வரும் திட்டங்கள் குறித்து நான் அதிசயித்தேன். பெருமையும் கொண்டேன். சுப்ரா இருந்திருந்தால் அவரும் அருணின் சாதனைகளை – தன் இனிய நண்பனின் சாதனைகளைக் – கண்டு நிச்சயம் மகிழ்ந்திருப்பார்.

சுப்ரா பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு யாரை உரையாற்ற அழைக்கலாம் என யோசித்தபோது, சுப்ராவின் அரசியல் பற்றிப் பேச நட்பைப் பற்றிப் பேச இங்கு வந்திருக்கும் பலர் நினைவுக்கு வந்தார்கள்.

எனினும் சுப்ராவின் நண்பர்களில் பலரும் அறிந்திராத அருண் அவர்களை அழைத்து சுப்ராவுடனான அவரின் பல்கலைக் கழக நட்பைப் பற்றிப் பேச அழைத்தோம். அவரும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார்.

எனவே அருண் அவர்கள் தன் நண்பர் சுப்ராவுக்காக சிரமமெடுத்து சிங்கப்பூரிலிருந்து இந்த நிகழ்ச்சிக்காகவே வந்திருக்கிறார். அவருக்கு நமது நன்றி.

அதே நேரத்தில் அருண் அவர்கள் சிங்கப்பூரில் அழகிய பாண்டியனின் துணையோடும் சிங்கை அரசாங்கத்தின் ஆதரவோடும் நிகழ்த்தி வரும் பல முன்னெடுப்புகள் குறித்து மலேசியத் தமிழ் ஆர்வலர்களும் தமிழ் ஊடகவிலயலாளர்களும் தெரிந்து கொள்ளும் விளக்கமளிப்புக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய வேண்டும் என முத்து நெடுமாறன் அடிக்கடி தெரிவித்து வந்தார்.

அதற்கேற்ப, அந்த சிங்கை தமிழர் சமுதாயத் திட்டங்கள் குறித்த கலந்துரையாடலையும் இணைத்து இன்றைய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கிறோம்.

சுப்ராவுக்கு மிகவும் பிடித்த பாரதியார் பாடல்

எனது வரவேற்புரையை நிறைவு செய்யும் முன் சுப்ராவுக்கு மிகவும் பிடித்த ஒரு பாரதியார் பாடலைக் கூறி நிறைவு செய்ய விரும்புகிறேன்.

2006-ஆம் ஆண்டில் தேசியத் துணைத் தலைவருக்கான போட்டி நடந்தபோது, சுப்ராவுக்கு எதிர்வினைகள் ஆற்றப்பட்டன. அந்தப் பிரச்சாரத்திற்கென சுப்ராவுக்கென ஒரு பிரச்சாரக் கையேட்டை தயாரிக்கும் பொறுப்பை நான் ஏற்றேன்.

அந்தப் பணியில் ஷெல் பாலா என்ற பாலகிருஷ்ணனும் எனக்கு பெருந்துணையாக இருந்தார். சுப்ராவை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று நூற்றுக்கணக்கான புகைப்படங்களை எடுக்க ஏற்பாடு செய்தார் பாலா.

அந்தக் கையேட்டில் தனது போராட்டங்களைக் குறிக்கும் கவிதை ஒன்று இடம் பெற வேண்டும் என சுப்ரா விரும்பியபோது தேடி எடுத்த கவிதைதான் இது:

சரவணனுக்கு மாலை அணிவிக்கும் சுப்ராவின் மூத்த புதல்வர் ஆனந்த் சுப்பிரமணியம்

தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி – மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக்கு இரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போல – நான்
வீழ்வேன் என்று நினைத்தாயோ?

இந்த இடத்தில் இன்னொரு சுவாரசியத்தையும் ரகசியத்தையும் கூற விழைகிறேன்.

அந்தப் பிரச்சாரக் கையேட்டை ஆங்கிலத்திலும் வெளியிட முடிவு செய்தோம்.

பாரதியார் கவிதையை மொழிபெயர்த்த டி.பி.விஜேந்திரன்

பாரதியார் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட நினைத்தபோது, நாங்கள் எல்லாம் தேர்தல் பணிகளில் மும்முரமாக இருந்ததால் நன்றாக ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது யார் என யோசித்தபோது என் நெருக்கமான நண்பர் ஒருவர் நினைவுக்கு வந்தார். ஆனால் அவரோ துன் சாமிவேலு அணியின் முக்கியத் தூண்களில் ஒருவராக இருந்தவர்.

இருந்தாலும் அவரை அணுகி சுப்ராவுக்குப் பிடித்தமான அந்தக் கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரக் கேட்டபோது அவரும் சம்மதித்தார். சுப்ரா பிரச்சாரக் கையேட்டின் ஆங்கிலப் பதிப்பில் இடம் பெற்ற பாரதியார் கவிதையின் ஆங்கில மொழியாக்கம் இதுதான்:-

They daily forage for rice to eat

Bandy trivial stories
Wilt in great sadness

Do many acts to sadden others

Reach grey-haired old age

And die in abject misery
Does thou expect me to fall

Like these comic men?

ஆனால் அன்றைய அரசியல் சூழல் காரணமாக அவர் பெயரை அந்த ஆங்கில மொழிபெயர்ப்பில் இடம் பெறச் செய்யவில்லை. யார் அவர் என்பதை இதுவரை எங்கேயும் கூறியதுமில்லை. அந்தக் கவிதையை மொழிபெயர்த்தது யார் என்பது சுப்ராவுக்கும் தெரியும்.

அவர்தான் இன்று இங்கே நம்மிடையே அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய வழக்கறிஞர் டத்தோ டி.பி.விஜேந்திரன் அவர்கள். மஇகாவின் கலாச்சாரப் பகுதித் தலைவராக இருந்தபோது பாரதியார் நூற்றாண்டு விழாவை சிறப்பாகக் கொண்டாடியதோடு, பாரதியின் பல கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் டிபி விஜேந்திரன் அவர்கள்.

இந்த நினைவுகளோடு சுப்ராவின் பிறந்த நாள் நினைவுச் சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி வரவேற்று எனதுரையை நிறைவு செய்கிறேன்.

*****