
புத்ரா ஜெயா: அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பதற்கு உதாரணம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் முதன்மை அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ ஷாம்சுல் இஸ்கண்டார் முகமட் அகின்னின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்!
அன்வாரின் தீவிரத் தொண்டராக தொடக்க காலத்தில் அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டவர் ஷாம்சுல். பின்னர் அன்வாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக மாறினார். அன்வார் சிறையில் இருந்தபோதும் அவரின் விசுவாசத்திற்குரிய இரண்டாம் கட்டத் தலைவர்களில் ஒருவராகச் செயல்பட்டார்.
2018 பொதுத் தேர்தலில் மலாக்கா ஹாங்துவா ஜெயா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். துணையமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
ஆனால் இரண்டே ஆண்டுகளில் பக்காத்தான் ஹாரப்பான் ஆட்சி கவிழ்ந்தது. பின்னர் 2022 பொதுத் தேர்தலில் யாரும் எதிர்பாராதவிதமாக மலாக்காவிலிருந்து மாறி பேராக்கின் பாகான் டத்தோ தொகுதியில் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடியை எதிர்த்து நின்றார். சுமார் 300 வாக்குகளில் சாஹிட் ஹாமிடி வெற்றியடைந்தார் என்றாலும், தான் அறிமுகமில்லாத ஒரு தொகுதியில் அதுவும் பலம் வாய்ந்த சாஹிட்டை எதிர்த்து சாதித்துக் காட்டிய ஷாம்சுலைப் பார்த்து அரசியல் பார்வையாளர்கள் வியந்தனர்.
அண்மையில்தான் ஷாம்சுல் மற்றொரு அரசியல் ரகசியத்தை பகிரங்கமாக ஊடகங்களில் வெளிப்படுத்தினார். 300 வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பாகான் டத்தோ தொகுதியில் மறு எண்ணிக்கைக்குக் கோரிக்கை விடுத்ததாகவும், எனினும் அன்வார் இப்ராகிம் அந்த முயற்சியைத் தடுத்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.
தோல்வியடைந்த ஷாம்சுல் அன்வார் பிரதமரானதும் அவரின் முதன்மை அரசியல் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டுகளாக புத்ரா ஜெயாவின் வலிமை வாய்ந்த அரசியல் மையப் புள்ளியாக வலம் வந்தார்.
பிகேஆர் தேர்தலின்போது நூருல் இசாவுக்கு ஆதரவாக, துணைத் தலைவர் போட்டியில் ரபிசி ரம்லியை எதிர்த்து முழங்கிய முதல் குரலுக்குச் சொந்தக்காரரும் ஷாம்சுல்தான்.
இப்போது ஆல்பர்ட் தே என்ற வணிகர் சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளால் நாளை வியாழக்கிழமை கோலாலம்பூர் அமர்வு நீதிமன்றத்தில் (செஷன்ஸ்) ஊழல் தடுப்பு ஆணையத்தால் குற்றம் சாட்டப்படவிருக்கிறார் ஷாம்சுல்.
அவருடன் வணிகர் ஆல்பர்ட் தேயும் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கவிருக்கிறார். அவர்கள் இருவரும் 5 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குவர். மறுநாள் வெள்ளிக்கிழமை ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மற்றொரு குற்றச்சாட்டை அவர்கள் இருவரும் எதிர்நோக்குவர்.





