
கோத்தாகினபாலு: சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்புக்கு இன்னும் சில தினங்களே எஞ்சியிருக்கும் நிலையில் அன்வாருக்கும் அவர் சார்ந்துள்ள பிகேஆர் கட்சிக்கும் ஒரு மிகப் பெரிய நெருக்கடி – சிக்கல் மிகுந்த சவால் – எழுந்துள்ளது.
சபாவின் நடப்பு முதலமைச்சர் ஹாஜிஜி நூர் தலைமையிலான ஜிஆர்எஸ் (காபுங்கான் ராக்யாட் சபா) கூட்டணி பிரதமராக அன்வாரை-மடானி அரசாங்கத்தை – ஆதரிக்கிறது.
அதே வேளையில் சபாவில் போட்டியிடும் மற்றொரு கூட்டணியான தேசிய முன்னணியைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அன்வார் தலைமையிலான மத்திய அரசாங்கத்தை ஆதரிப்பதோடு, பக்காத்தான் ஹாரப்பானுடன் கூட்டணி அடிப்படையில் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருக்கிறது.
ஆனால், சபா சட்டமன்றத் தேர்தலிலோ, ஜிஆர்எஸ் – தேசிய முன்னணி இரு கூட்டணிகளும் 44 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதுகின்றன. முஸ்லீம் – மலாய் வாக்காளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள இந்தத் தொகுதிகளை இரு கூட்டணிகளுமே குறிவைத்திருக்கின்றன.
அன்வாரின் நெருக்கடி என்னவென்றால், இந்தத் தொகுதிகளில் பிகேஆர் கட்சி – பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி – யாரை ஆதரிக்கப் போகிறது என்பதுதான்! இப்போதைக்கு நாங்கள் யாரையும் ஆதரிக்கவில்லை – என்றாலும் உரிய நேரத்தில் யாருக்கு எங்களின் ஆதரவு என்பதை அறிவிப்போம் என பிகேஆர் கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் பூசியா சாலே தெரிவித்திருக்கிறார்.
எனினும் இறுதிவரை யாருக்கும் ஆதரவு தெரிவிக்காமல் ஒதுங்கிக் கொண்டு, தேர்தல் முடிவுகளுக்கு ஏற்ப ஏதாவது ஒரு தரப்புடன் சமரசம் செய்து கொள்ளும் முடிவை அன்வார் எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.





