கோத்தாகினபாலு: நடந்து முடிந்த சபா சட்டமன்றத் தேர்தலில் பக்காத்தான் ஹாரப்பானை விட சற்றே மேம்பட்ட வெற்றிகளை தேசிய முன்னணி பெற்றிருப்பது ஓர் ஆச்சரியம். 6 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் 45 தொகுதிகளில் போட்டியிட்டு, 6 தொகுதிகளில் மட்டுமே வென்றிருக்கும் தேசிய முன்னணி ஒரு காலத்தில் 3 தவணைகளாக சபாவை ஆண்டது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
அதை வைத்துப் பார்க்கும்போது இதுவும் தேசிய முன்னணிக்கு மோசமான தோல்விதான். சபா வாக்காளர்களின் புறக்கணிப்புதான்.
அம்னோ வேட்பாளர்கள் 41 தொகுதிகளில் களம் கண்டனர். ஆனால் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றனர். மசீச போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. தேசிய முன்னணியின் உள்ளூர் உறுப்பியக் கட்சியான பிபிஆர்எஸ் 2 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
ஆக, தேசிய முன்னணி 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. சர்ச்சைக்குரிய அதன் சபா மாநிலத் தலைவர் புங் மொக்தாரும் லாமாக் தொகுதியில் வெற்றி பெற்றிருப்பது தேசிய முன்னணிக்கான ஆறுதல்.
மற்றொரு மேற்கு மலேசியக் கட்சியான ஜசெக போட்டியிட்ட 8 தொகுதிகளிலும் தோல்வி கண்டது.





